Published : 28 May 2024 09:22 PM
Last Updated : 28 May 2024 09:22 PM
சென்னை: ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 2.65 லட்சம் பேரை பரிசோதனை செய்ததில் 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இதுவரை 1.50 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் விதமாக, ‘தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம்’ கடந்த மாதம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார் தொழிலாளர்களுக்கு பணியிடங்களுக்ககே சென்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்கின்றனர்.
அதில், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்ற இணை நோய்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 35 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 6.3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்து, தற்போது, 2.65 லட்சம் பேருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்ததில் 13,699 பேருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தை முறையாக கவனிக்காவிட்டால் அது உடல் உறுப்புகளை பாதிப்பதுடன் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
எனவே, தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய, பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT