Published : 28 May 2024 03:04 PM
Last Updated : 28 May 2024 03:04 PM
புதுச்சேரி: அயோத்தி பாலராமர் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார். ராமர் கைவிட்டுவிடுவாரோ என்பதால்தான் விவேகானந்தர் பாறைக்கு மோடி வருகிறார் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில், மேல் படிப்பு படிக்க மாணவர்களும், பெற்றோரும் சான்றிதழுக்காக வருவாய்த்துறைக்கு அலைகின்றனர். நேரத்தோடு சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கப்படுகிறார்கள். முதலில் வாங்கிய சான்றிதழைக்கூட சரியாக அதிகாரிகள் பார்ப்பதில்லை. பணியாளர்கள் பற்றாக்குறையால் பணிச்சுமையால் உடனடியாக சான்றிதழை தரமுடியாத நிலையும் நிலவுகிறது.
சாதி சான்றிதழை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கேட்பது ஏன்? சாதி எப்படி மாறும் எனத் தெரியவில்லை. சாதி சான்றிதழுக்காக இழுத்தடிப்பது சரியான நடைமுறை இல்லை. முதல்வர் இதை சரியாக கவனிக்கவில்லை. அறிவிக்கப்படாத மின்வெட்டு புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. மின்துறை அமைச்சர் தொகுதியிலேயே இப்பிரச்சினை உள்ளது. பொதுமக்கள் மின்வெட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசிஸ்டென்ட் தேர்வு நடந்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது. சீனியாரிட்டி சரியாக வரையறுத்து தரப்படவில்லை. நீதிமன்றத்தையும் மக்களையும், பணியாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். உரிய வகையில் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிடங்களை நிரப்பவேண்டும். இல்லாவிட்டால் சிபிஐயிடம் புகார் தருவேன்.
புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இதை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் இதுவரை பெரிய வியாபாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. போதைப்பொருள் விற்பனை சண்டையால் கொலைகளும் நடந்துள்ளன. குழந்தை இறப்புக்கு பிறகும் அரசு விழிக்காமல் உறக்கத்தில்தான் உள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களைக் காக்கவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
போதைப்பொருள் பற்றி ஆளுநரும், டிஜிபியும்தான் சொல்கிறார்கள். முதல்வர், அமைச்சர்கள் வாய்திறப்பதே இல்லை. யார் இதில் துணையாக உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. போதைப்பொருள் நடமாட்டம் பற்றி காவல்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர்களது கையை கட்டிப்போட்டது யார் என்று தெரியவில்லை.
மத்தியில் நாங்கள் ஆட்சியமைக்கவுள்ளோம். பாஜக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் வரமுடியாது. அயோத்தி ராமர் கோயில் கட்டிய இடத்தில் இண்டியா கூட்டணிதான் வெல்வோம். அயோத்தி பால ராமர் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார். ராமர் கைவிட்டுவிடுவாரோ என்பதால் தான் விவேகானந்தர் பாறைக்கு வருகிறார் பிரதமர் மோடி. ஆக, நிச்சயம் ராமர் மோடியிடம் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT