Published : 28 May 2024 02:49 PM
Last Updated : 28 May 2024 02:49 PM

“வெறுப்பு பேச்சால் வெற்றி பெறலாம் என மோடி பகல் கனவு காண்கிறார்” - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

சென்னை: சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புரையில் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மோடி பகல் கனவு காண்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போல இருப்பதாக கூறி அபத்தமான வாதங்களை நாள்தோறும் பிரதமர் மோடி பேசி வந்தார்.

இந்த கூற்றுக்கு தொடர்ந்து மறுப்புரை கூறப்பட்டாலும் மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிற பரப்புரையை பாசிச போக்கு கொண்ட நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ளவில்லை.

சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தியும், கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டும் எப்படியாவது வெற்றி பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை கைப்பற்றி விட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முதல்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்தன.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று கூறுவதைவிட முட்டாள்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது. இதை பெரும்பான்மையான இந்து மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை.

அதோடு நிற்காமல் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்றும், தற்போது எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று கடைந்தெடுத்த ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை சமீபகாலமாக தொடர்ந்து பிரதமர் மோடி நவீன கோயபல்ஸ் போல பேசி வருகிறார்.

இந்தியா விடுதலை பெற்றதும் காந்தியடிகளின் பரிந்துரையின் பேரில் அரசமைப்புச் சட்டத்தை தயாரிக்க வரைவு குழு தலைவராக சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நியமித்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்தியவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், காங்கிரஸ் கட்சியும் தான். அதன்படி, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு வழங்கி 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

அதேபோல, பின்தங்கிய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்த போது, அதற்காக பெருந்தலைவர் காமராஜரின் ஆலோசனையின் பேரில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து இடஒதுக்கீட்டை உறுதி செய்து, சமூகநீதியை நிரந்தரமாக பாதுகாத்தவர் அன்றைய பிரதமர் நேரு.

அந்த திருத்தத்தின்படி தான் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அடிப்படையில் தான் இன்றும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்றை மூடிமறைத்து எந்த காங்கிரஸ் இயக்கம் இடஒதுக்கீட்டு உரிமைகளை வழங்கியதோ, அதே இயக்கத்தின் மீது உள்நோக்கத்தோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறுவதை விட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்று பல நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்திருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது மதங்களை பொருட்படுத்தாமல் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டில் எப்படி பங்கு இருக்கிறதோ, அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பங்கு இருக்கிறது.

உண்மை நிலை இப்படியிருக்க சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புரையில் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மோடி பகல் கனவு காண்கிறார். ஆனால், 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பாஜக ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது.

இந்த அலையினால் மோடி ஆட்சி வருகிற தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதியாகி இருக்கிறது. மோடி தனது பரப்புரையில் எதிர்கட்சியினரை மிகமிக இழிவாக தரக்குறைவான முறையில் பிரதமர் பதவியை வகிக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் பேசி வருகிறார்.

முகலாய அரசவையில் நடத்தப்படுகிற முஜ்ரா நடனத்தை எதிர்கட்சியினர் நடத்தி மகிழ்ந்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஒரு பிரதமர் ஆபாச நடனத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சியினரை தேவையில்லாமல் இழிவுபடுத்துவது நரேந்திர மோடியின் அரசியல் அநாகரீகத்தையே காட்டுகிறது.

தேர்தல் பரப்புரையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நரேந்திர மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்றும், மறு பிறவி என்றும் பிதற்ற ஆரம்பித்து விட்டார். ‘தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று கூறும் ஒருவர் உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்று உறுதியாக நம்பும் ஒருவர், இந்திய நாட்டின் பிரதமராக இருப்பதற்கு மனரீதியாக தகுதியுடைவர் தானா?” என்கிற கேள்வி நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது.

எனவே, மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது 2019 தேர்தலோடு முடிந்து போன கதையாகும். அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024 இல் ஏமாற்ற முடியாது.

மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடியின் ஆட்சியை அகற்றி பாடம் புகட்டுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இண்டியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x