Last Updated : 28 May, 2024 04:46 AM

1  

Published : 28 May 2024 04:46 AM
Last Updated : 28 May 2024 04:46 AM

பழங்கால ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்க ஆய்வு மையம்: பணிகளை தொடங்கிய அறநிலையத் துறை

சென்னை: கோயில்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பாதுகாக்கும் வகையில் ஆய்வு மையம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை தொடங்கி உள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பழங்கால ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், ஏடுகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் முன்னோர்கள் காகிதப் பயன்பாடு வருவதற்குமுன் பனை ஓலைகளையே பதிவுத்தாள்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்த ஓலைச்சுவடிகளில் கோயில்கள் பற்றிய விவரங்கள், வரலாறு, மன்னர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

அக்காலத்தில் அன்றாடம் நடைபெற்ற கோயில் நிர்வாகம், வரவுசெலவு விவரம், மன்னர்களால்கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடை, பூஜை முறைகள், கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், வரலாறு முதலிய விவரங்கள் ஓலைச்சுவடிகளில் தெரிவிக்கப்பட்டதால் பண்டைய கால கலாச்சாரத்தின் பிம்பங்களாக இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்நிலையில், இவ்விவரங்களை வருங்கால தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கி தற்கால தமிழுக்கு மாற்றும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத் துறை ஈடுபட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்பில் ‘கோயில்களில் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஓலைச்சுவடிகளில் உள்ள விவரங்களைமின்பதிப்பு செய்து ஆவணப்படுத்தவும், கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை சுவரோவியங் களைப் பாதுகாக்கும் வகையிலும்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ரூ.5 கோடிமதிப்பீட்டில் ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்படி ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகளை அறநிலையத் துறை தொடங்கி உள்ளது.

ஆலோசனைக் குழு உறுப்பினர்: ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் பாதுகாத்தல் பணிக்கு துறை அலுவலர்கள் மற்றும் வல்லுநர் கருத்துகளைப் பெற்று பரிசீலித்து நடைமுறைப்படுத்த ஆலோசனைக் குழு உறுப்பினராக ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உலகத் தமிழ்ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறையுடன் இணைந்து சுவடிஆய்வாளர்கள் மூலம் கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு கிடைக்கும் சுவடிகள் சேகரிக்கப்பட்டு, பராமரித்து பாதுகாக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

297 கோயில்களில் கள ஆய்வு: இதுவரை 297 கோயில்களில் கள ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 31 கோயில்களில் இருந்து சுவடிகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் கிடைத்துள்ளன. இந்த களஆய்வில் இதுவரை 1,80,280 சுருணை ஏடுகள், 351 இலக்கியச்சுவடி கட்டுகள், 5 தாள் சுவடிகள், 32 செப்புப் பட்டயங்கள், 2 வெள்ளி ஏடு, 1 தங்க ஏடு கிடைத்துள்ளன. இலக்கிய ஓலைச்சுவடிகளை மின்பதிப்பு செய்யும் பணியை தமிழ்நாடு எல்காட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஓலைச்சுவடிகளை மின்பதிப்பு செய்து பின்னர்நூலாக்கம் செய்வதற்கான ஆய்வுக்கூடம் அமைக்கும் பணிகள்தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் மின் பதிவுசெய்யப்பட்ட ஓலைச்சுவடிகள் மற்றும் செப்புப் பட்டயங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். அவற்றை பொதுமக்கள்இலவசமாக பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கானபணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். விரைவில் பணிகள் நிறைவு பெற்று ஆய்வு மையம் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x