Published : 21 Apr 2018 10:16 AM
Last Updated : 21 Apr 2018 10:16 AM
சென்னை மாநகரத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்கு முறை’ என்ற திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய மாநகரங்களில் போக்குவரத்து மேலாண்மை என்பது அரசுத் துறைகளுக்கு பெரும் சவாலாக இருந்து வரு கிறது. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில் போக்குவரத்து கட்டமைப்புகளை ஏற்படுத்தாதது பெரும் குறையாக இருந்து வருகிறது.
ஒழுங்கற்ற நடைமுறைகள்
மேலும், இந்திய நகரங்களில் ஒழுங்கற்ற, லேன்களாக பிரித்து அமைக்கப்படாத போக்குவரத்து நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. அதனால் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் போக்குவரத்து நடைமுறைகளை அப்படியே இந்திய நகரங்களில் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, இந்திய நகரங்களில் உள்ள போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் தனியாக போக்கு வரத்து ஒழுங்குமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது.
அதனால் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் நிதி ஆயோக் மூலமாக ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் உள்ள நகரங்களில் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்கு முறை’யை உருவாக்கி செயல் படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்குமுறை’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
இத்திட்டத்தின்கீழ், பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் மாநகரப் பேருந்துகள் எத்தனை மணிக்கு வருகின்றன, எங்கே வந்துக்கொண்டிருக்கின்றன என்பதை பெரிய திரைகள் மற்றும் ஒலி வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி
பேருந்தில் பயணிப்போருக் கும் அந்தந்த நிறுத்தங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கும் வசதி பேருந்தில் இடம்பெற்றிருக்கும். இதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து, பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும். காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்து சிக்னல்கள் மேம்படுத்தப்படுவதுடன், அதிக திறன் வாய்ந்த சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, சிக்னல்களில் விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண் பலகையை படம் பிடித்து நடவடிக்கை எடுக்கும் வசதியும் கொண்டுவரப்பட உள்ளது.
மேலும், குறிப்பிட்ட கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, குறுஞ்செய்தி வாயிலாக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளைத் தெரிந்துகொள்ளும் வசதி உள்ளிட்டவை கொண்டு வரப்படும். மொத்தத்தில் இத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பும், பயணிகள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், திட்டத்துக்கான கருத்துரு தயாரித்து அளிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் ‘நுண்ணறிவு போக்குவரத்து ஒழுங்குமுறை’ திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT