Last Updated : 27 May, 2024 08:07 PM

 

Published : 27 May 2024 08:07 PM
Last Updated : 27 May 2024 08:07 PM

புறவழிச் சாலை திட்டத்தால் வீடுகளை இழந்த நரிக்குறவர்கள்: புதிய வீடுகளுக்கு சிவகங்கை ஆட்சியர் உறுதி

சிவகங்கை ஆட்சியர் அலுவலத்துக்கு தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் முறையிட வந்த பழமலை நகரைச் சேர்ந்த நரிக்குறவர்கள்.

சிவகங்கை: சிவகங்கையில் புறவழிச்சாலை திட்டத்தால் வீடுகளை இழந்த நரிக்குறவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தருவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உறுதியளித்துள்ளார்.

சிவகங்கை நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.6 கி.மீ.க்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பழமலை நகரில் 9 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகளை காலி செய்த அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தற்காலிக தகரக் கொட்டகையை ஒப்பந்ததாரர் அமைத்துக் கொடுத்தார்.

அதில் தங்குவதற்கு போதிய இடம் இல்லாததால், அருகிலேயே தார்பாய், கீற்றுக் கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர். மழை நேரங்களில் தண்ணீர் புகுவதாலும், மின்சாரம் இல்லாததாலும் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்புத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், பாதிக்கப்பட்டோர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கெனவே 3 சென்ட் இடத்தில் வீடு கட்டிக் கொடுத்தனர். தற்போது வீடுகளை இடித்து, 3 சென்ட் இடத்தை கையகப்படுத்திவிட்டு, ஒரு சென்ட் இடம் தான் தருகின்றனர். எங்களுக்கு மீண்டும் 3 சென்ட் இடத்தை ஒதுக்கி வீடு கட்டித் தர வேண்டும்.

அதேபோல் கோயில்களையும் இடித்துவிட்டனர்’’ என்றனர். இதையடுத்து அவர்களிடம், ‘‘விரைவில் 9 குடும்பங்களுக்கும் 3 சென்ட் இடத்துடன் வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் கட்டவும் இடம் ஒதுக்கித் தரப்படும்’’ என ஆட்சியர் உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x