Published : 27 May 2024 05:04 PM
Last Updated : 27 May 2024 05:04 PM

“நிச்சயமாக சொல்கிறேன்... ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் தான்!” - தமிழிசை அடுக்கும் உதாரணங்கள்

சென்னை: “நிச்சயமாக சொல்கிறேன்... ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான்" என்று தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், "பிரதமர் மோடி எப்போதும் போல தமிழ் மக்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்டுள்ளார் என்பது தான் உண்மை. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக பொய் பிரச்சாரம் செய்துவருகிறது. ஜூன் 4-ல் அதற்கான பதில் கிடைக்கும். மதவாதத்துக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். மதவாதமே இங்கு இல்லை. மனிதவாதம் இருக்கிறது. பிரதமர் மோடியை எவ்வளவு திட்டினாலும், அவரின் திட்டங்கள் மக்களிடம் எப்படி சேர்ந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் மறுக்க முடியாது.

பிரித்தாளும் அரசியல் தமிழகத்தில் ஸ்டாலின் போன்றோர் தான் செய்யப்படுகிறது. தோல்வி பயத்தில் பாஜக இருப்பதை போல இண்டியா கூட்டணியினர் பொய் பிரச்சாரத்தை செய்கிறார்கள். சமீபத்தில் முடிந்த ஐந்து மாநில தேர்தலின்போதும் இதேபோன்ற பிரச்சாரத்தை கையாண்டார்கள். ஆனால், இறுதியில் பாஜகதான் வென்றது. தற்போதும் அதேபோல் ஒரு சூழ்நிலை தான் வரப்போகிறது. ஜூன் 4ல் மிக வலுவான ஒரு அரசை மத்தியிலும், வலுவான கட்சியாகவும் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறும்.

பிரதமர் மோடி பேசுவது இங்கே திரித்து கூறப்படுகிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் தெளிவாக பேசுகிறார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகவே பிரதமர் மிகத்தெளிவாக பேசுகிறார். தென்சென்னை தொகுதியில் நிச்சயம் வெற்றிபெறுவேன்.

ஆளுநர் பதவியை விட்டுவந்த வருத்தம் இல்லை. தாய் வீட்டுக்கு திரும்பிய மகிழ்ச்சியே பாஜகவில் மீண்டும் இணைந்ததில் உள்ளது. நாங்கள் கவலைப்படக்கூடிய அளவுக்கு தமிழக மக்கள் எங்களை வைத்திருக்க மாட்டார்கள். துணிச்சலாக ஆளுநர் பதவியை விட்டுவருகிறேன் என்றால், பாஜகவினரால் மட்டும் தான் இத்தகைய துணிவை காட்ட முடியும்" என்று கூறினார்.

அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, “நிச்சயமாக சொல்கிறேன்... ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான். இன்று சிலர் இதை எதிர்க்கலாம். கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதாக இருக்கட்டும், கர சேவகர்களுக்கு பாராட்டு தெரிவித்தது, கர சேவகர்களை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது இது தவறு என்று மிக துணிச்சலாக குரல் எழுப்பியது, ராமர் கோயில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கியவர் ஜெயலலிதா.

ராமர் கோயில் கட்டுவதுக்கு ஆதரவு தெரிவித்த இந்து மதம் குறித்து அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த இந்துத்துவா தலைவர் அவர். ராமர் சேது விவகாரத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை எங்களால் முன்னிறுத்த முடியும்.

ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து ராமர் கோயில் எங்கள் கனவு என்று கூறியிருப்பார். பாஜக அவரை குறுகிய வட்டத்தில் அடைக்கவில்லை. அவரை பெரிய வட்டத்தில் வைத்துள்ளது. ஜெயலலிதாவை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல விரும்புகிறோம்.

அவரை எதிர்ப்பவர்கள் தான் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் வைக்க முயற்சிக்கிறீர்கள். இந்துத்துவா என்பதை ஒரு மத ரீதியாக பார்க்கிறார்கள். நாங்கள் இந்துத்துவா என்பதை ஒரு வாழ்க்கை முறையாக பார்க்கிறோம். அதனை தான் ஜெயலலிதா கடைபிடித்தார். ஜெயலலிதா நல்ல நேரம் பார்த்து தான் அதிமுக வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய வைப்பார். இந்துத்துவா குறித்து புரிதல் இல்லாத அதிமுகவினர் தான் நாங்கள் கூறியதை எதிர்க்கின்றனர்" என்று தமிழிசை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x