Last Updated : 27 May, 2024 05:01 PM

 

Published : 27 May 2024 05:01 PM
Last Updated : 27 May 2024 05:01 PM

தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய 11 லட்சம் மீட்டர்களை கொள்முதல் செய்தது தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: மின்சாதனங்களை தரமாக வாங்குவதை உறுதி செய்வதற்காக, தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய 11 லட்சம் மீட்டர்களை தமிழ்நாடு மின்வாரியம் கொள்முதல் செய்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க மீட்டர் பொருத்தி உள்ளது. இந்த மீட்டர், மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் டெண்டர் மூலமாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்த நிறுவனங்கள் தொழில்நுட்பப் புள்ளியில் தேர்வு ஆவதற்காக மாதிரிக்காக தரமான மின்சாதனங்களை வழங்குகின்றன. ஆனால், அந்தத் தரத்துக்கு இணையாக மின்சாதனங்களை விநியோகம் செய்வதில்லை.

இதனால், தரமற்ற மின்சாதனங்கள் விரைவில் பழுதடைகின்றன. இந்த முறைகேடுகளை தடுக்க மின்வாரியம் மீட்டர், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தனித்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

அதன்படி, மீட்டரில் கியூஆர் கோடு உடன் 16 இலக்கத்தில் மின்வாரியத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் வரிசை எண்கள் இருக்கும். இது மின்மாற்றியில் 15 இலக்கத்திலும், மின்கம்பத்தில் 13 இலக்கத்திலும் இருக்கும்.

மின்வாரியம் வழங்கும் இந்த தனித்துவ எண்ணை அச்சிட்டு தான் ஒப்பந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும். இதன் மூலம், அந்த எண்ணை வைத்து எந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது, எந்த பிரிவு அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது, எந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களை அலுவலகத்தில் இருந்தே துல்லியமாக அறிய முடியும்.

இதன்படி, தற்போது 11.45 லட்சம் மீட்டர்களும், 9,500 மின்மாற்றிகளும் தனித்துவ எண்ணுடன் வாங்கப்பட்டுள்ளன. இதனால், இச்சாதனங்கள் பழுதானால் சம்மந்தப்பட்ட நிறுவனம் மாற்றி தரும்படி செய்வது அல்லது சரி செய்து தர முடியும். இனி அனைத்து மின்சாதனங்களும் தனித்துவ எண்ணுடன் வாங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x