Published : 10 Apr 2018 04:38 PM
Last Updated : 10 Apr 2018 04:38 PM
மோசமான குடிசைமாற்றுவாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை அகற்ற அனுப்பிய கோப்பை, ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவுடன் ஆளுநர் மாளிகை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் குடியேறும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
புதுவை ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குமரகுரு பள்ளத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதுவை அரசின் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அங்குள்ள 240 குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே இக்கட்டிடம் சிதிலமடைந்து இடிந்துவிழும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து குடியிருப்பை இடித்துப் புதியதாகக் கட்டித் தரக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தொகுதியின் எம்எல்ஏ லட்சுமி நாராயணனின் நடவடிக்கையால் முதல்வர், அமைச்சர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை ஆய்வு செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2016-ம் ஆண்டு முதலே குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டு இடித்துவிட கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் ஆளுநரின் கவனத்திற்குச் செல்ல காலதாமதம் ஆனது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க அனுமதி கேட்டு ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க வேண்டாம் எனக் கூறி, அதனை ஏன் இடிக்க வேண்டும் என 6 கேள்விகள் கேட்டு கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் மற்றும் குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணியளவில் புதுவை பாரதி பூங்கா வந்தனர். ஆளுநர் மாளிகையை நோக்கி பூங்காவில் அமர்ந்து அவர்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு அரசு கொறடா அனந்தராமன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரியக்கடை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களுக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்றும், பூங்காவில் இருந்தால் பாதுகாப்பு இருப்பதாகவும் கூறி சட்டப்பேரவை உறுப்பினரும் குடியிருப்புவாசிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT