Published : 27 May 2024 05:34 AM
Last Updated : 27 May 2024 05:34 AM
சென்னை: பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நிறைவடைந்தவுடன், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த போதிலும், மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு, மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக, மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்று நடைபெற இருக்கும் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும், முதல் பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஆகும்.
சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT