Published : 07 Apr 2018 09:31 AM
Last Updated : 07 Apr 2018 09:31 AM

ரூ.615 கோடி செலவில் பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு திட்டம்: கழிவுநீர் கலப்பை தடுத்து நீரின் தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம்

பக்கிங்ஹாம் கால்வாயை ரூ.615 கோடியில் சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தில் கழிவுநீர் கலப்பைத் தடுப்பது, ஆக்கிரமிப்புகள் அகற்றம், ஓடும் நீரின் தரத்தை உறுதி செய்வது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்காக ஆங்கிலேயர்களால் செயற்கையாக பக்கிங்ஹாம் கால்வாய் உருவாக்கப்பட்டது. இது ஆந்திர மாநிலத்தில் தொடங்கி புதுச்சேரி வரை 420 கிமீ நீளத்தில் அமைந்துள்ளது. இதை தேசிய நீர்வழித்தடமாக மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு அறிவித்திருந்தது.

ஒத்துழைக்காத தமிழக அரசு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்கக் கோரிய வழக்கு ஒன்றில் உள்நாட்டு நீர்வழித்தட ஆணையத்தின் தலைமை பொறியாளர் ஆஜராகி, “சென்னையில் எண்ணூர் முதல் முட்டுக்காடு வரையிலான கால்வாயில், கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்துவது மட்டுமே எங்கள் பணி.

அந்த கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, அகலப்படுத்துவது, கழிவுநீர் விடுவது மற்றும் குப்பைகள் கொட்டுவதைத் தடுப்பது, தூர் வாருவது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். எங்கள் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. அதனால் சென்னையில் இருந்த எங்கள் அலுவலகத்தை விஜயவாடாவுக்கு மாற்றிவிட்டோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் பக்கிங்ஹாம் கால்வாயில் எண்ணூர் கழிமுகப்பகுதி முதல் முட்டுக் காடு உவர்நீர் பகுதி வரையிலான 41 கிமீ பகுதியை ரூ.615 கோடியில் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பக்கிங்ஹாம் கால்வாயில் 5 பிரதான கால்வாய்களும் 19 சிறு கால்வாய்களும் இணைவதும், கால்வாயின் குறுக்கே 35 பெரிய பாலங்களும், 13 சிறு பாலங்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 419 இடங்களில் நேரடியாக கழிவுநீர் விடப்படுவதும், கால்வாய் பகுதியில் 26,100 குடும்பங்கள் வசிக்கும் 82 நகர்கள் அமைந்திருப்பதும், கால்வாய் கரைகளில் 18,000 டன் திடக்கழிவுகள் கிடப்பதும் தெரியவந்துள்ளது.

இந்தக் கால்வாயை சீரமைக்கும் திட்டத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது, நீர் தரத்தை மேம்படுத்துவது மிதக்கும் குப்பைகளை அகற்றுவது, கால்வாயில் வெள்ளம் தாங்கும் கொள்ளளவை அதிகரிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பசுமைப் பகுதிகளை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற உள்ளன.

கருத்து கேட்புக் கூட்டம்

இதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, ஹைதராபாத்தைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். அசோசியேட் என்ற கலந்தறிதல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில், வரைவுத் திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து பல்வேறு அரசுத் துறைகள், சமூக அமைப்புகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற சமூக அமைப்பினர், “பக்கிங்ஹாம் கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்தால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுவதைத் தடுக்க வேண்டும். சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை அமைந்துள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதை தூண்கள் அனைத்தும் கால்வாயில் அமைக்கப்பட்டு, கால்வாயின் அளவு குறுகிவிட்டது. இதனால் மழைநீர் முறையாக வடிய வழியின்றி வெள்ளம் ஏற்படுகிறது. எனவே அந்த இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்தி கால்வாயின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும்” என்றனர்.

பின்னர் இக்கருத்துகளை உள்ளடக்கிய வரைவுத் திட்டம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று கலந்தறிதல் நிறுவனத்தினர் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x