Last Updated : 02 Apr, 2018 09:50 PM

 

Published : 02 Apr 2018 09:50 PM
Last Updated : 02 Apr 2018 09:50 PM

புதுச்சேரியில் இயக்குநர், அரசு அதிகாரிகள் 5 பேர் மீது பெண் ஊழியர்கள் பாலியல் புகார்: ஆதாரத்துடன் எழுத்துபூர்வமாக அளிப்பு

புதுச்சேரியில் ஒரு அரசுத்துறை இயக்குநர் உட்பட பல்வேறு அரசு துறை முக்கிய அதிகாரிகள் 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் குழுவுக்கு பெண் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இப்புகாரில் ஒரு குறிப்பிட்டத்துறையிலிருந்துதான் அதிக புகார்கள் வந்துள்ளன. 2 வாரத்துக்குள் விளக்கம் தர சம்பந்தப்பட்டோருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

பெண்களுக்கு பணியிடங்களில் நேரிடும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத் உத்தரவின்பேரில், உள்ளூர் புகார்கள் குழு (local complaints committee) என்ற தனிப் பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை தடுக்கும் சட்டத்தின் கீழ் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு தலைவராக முன்னாள் குழந்தைகள் நலக்குழு தலைவி டாக்டர் வித்யா ராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இப்பிரிவில் 4 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவுக்கான அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்திலேயே அமைத்து தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அதே துறைகளில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக உள்ளூர் புகார்கள் குழுவுக்கு 5 புகார்கள் வந்துள்ளன. இதில் 3 புகார்கள் உரிய ஆதாரங்களுடன் எழுத்துபூர்வமாகவும், 2 புகார்கள் வாய்மொழியாகவும் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, எழுத்துபூர்வமாக வந்த புகார்களை விசாரிக்க இக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, 3 அரசு அதிகாரிகளிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 வாரத்துக்குள் புகார்கள் குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் புகார்கள் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஒரு துறையின் இயக்குநர் உட்பட முக்கிய அதிகாரிகள் 5 பேர் மீது புகார்கள் வந்துள்ளன. இதில் ஒரு முக்கியத்துறையில்தான் அதிகளவு புகார்கள் வந்துள்ளன" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x