Published : 26 May 2024 02:06 PM
Last Updated : 26 May 2024 02:06 PM
சென்னை: 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.
தற்போது, இந்த திமுக அரசின் மின் வாரியம் வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு இருந்து, மின் வாரிய ஊழியர்கள் கணக்கெடுப்புக்கு வரும்பொழுது, வீட்டு உரிமையாளர் ஒரு பகுதியிலும், வாடகைக்கு இருப்பவர் மற்றொரு பகுதியிலும் குடியிருந்தால், இரண்டு மின் இணைப்புகளுக்கும் தற்போதுள்ள 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால், வாடகைக்கு இருப்பவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டால் உடனடியாக வீட்டு உரிமையாளரின் பெயரில் உள்ள இரண்டு மின் இணைப்புகளில் ஒரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு மின் இணைப்பு மட்டுமே வழங்கப்படும்.
மீண்டும் அந்த வீட்டில் வாடகைக்கு வேறொருவர் வந்தால், அந்த உரிமையாளர், வாடகைதாரர் வந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மீண்டும் புது மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அது, மின் வாரிய சட்டப்படி மீண்டும் வைப்புத் தொகை, முன்பணம் போன்ற மின்சாரக் கட்டணங்களை செலுத்தி, புது மின் இணைப்பு வருவதற்குள் வாடகைக்கு வந்தவர் வீட்டையே காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். எனவே, வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒரே மின் இணைப்பில் வாடகைதாரர்களுக்கும் மின் வசதி வழங்கி, வாடகைதாரர்கள் பயன்படுத்தும்
மின்சாரத்துக்கு அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்புகள் அதிகம் உருவாகும். வீடு வாடகைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களே ஆவார்கள். எனவே, அவர்கள் மின்சாரத்துக்காக கூடுதலாக செலவு செய்கின்ற நிலை ஏற்படும்.
சில நாட்களுக்கு முன்பு, மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்களை மின் இணைப்புடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மின்சாரத் துறை உத்தரவிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, திமுக அரசும், அமைச்சர்களும் மின் நுகர்வோர்களுக்கு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அளித்த உறுதிமொழிப்படி, வாடகைதாரர்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிமையாளர்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கும்பட்சத்தில், வாடகைதாரர்களும் இருந்தால் 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், வாடகைக்கு உள்ளவர்கள் வீட்டை காலி செய்தால், மீண்டும் வாடகைக்கு வருபவர்கள் விலையில்லா மின்சாரம் மற்றும் குறைந்த மின் கட்டண வசதியைப் பெறுவதற்கு வசதியாக மின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இதுபோன்றே, வணிக நிறுவனங்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், ஒரு மின் இணைப்பை மட்டும் விட்டுவிட்டு, மற்ற இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், மின் துறை ஊழியர்கள் – ஹெல்ப்பர், லைன்மேன் மற்றும் போர்மேன் போன்றவர்கள் நேரில் சென்று மின் கட்டணம் கட்டாதவர்களிடம், உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மின் கட்டணத்தை செலுத்த வைப்பார்கள். மின் கட்டண இணைப்பு துண்டிக்கப்பட்டால் Disconnect charges மற்றும் Reconnect charges என்று 60 ரூபாய் வசூலிப்பார்கள்.
தற்போது இந்த திமுக ஆட்சியில், மின்சாரத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் மின் கட்டணம் செலுத்த இயலாதவர்களிடம் நேரில் சென்று மின் கட்டணம் கட்ட கடைசி நாள் என்ற எச்சரிக்கையை யாரும் தெரிவிப்பதில்லை என்றும், Disconnect charges மற்றும் Reconnect charges-களை பல மடங்கு உயர்த்திவிட்டதாகவும் செய்திகள் தெரிய வருகிறது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது. தனியாரிடமிருந்து மின் கொள்முதல், மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல், நிலக்கரி கொள்முதல் என்று எல்லா வகைகளிலும் கொள்ளையடிப்பதற்காகவே, செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, வசன வியாபாரிகள் அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.
2016, சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் .
அதிமுக ஆட்சியின் போது இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்றும்; மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...