Published : 26 May 2024 09:58 AM
Last Updated : 26 May 2024 09:58 AM
சென்னை: திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை திமுக அழிக்கிறது என தமிழக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவர் பிறந்த வைகாசி அனுஷ நட்சத்திரத் தன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி,காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் படத்துடன் அவரை நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டிருந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கும், வெறுக்கும் கூட்டம் இதை விமர்சித்துள்ளது.
திருவள்ளுவருக்கு எப்படி மதச்சாயம் பூசலாம் என கேட்டுள்ளனர். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இதில் உள்ள 10 பாடல்களும் இறைவனை போற்றிப் பாடுகின்றன.இந்து மத கருத்துகளை சொன்ன திருவள்ளுவர் இந்துவாகத்தானே இருக்க முடியும்.திருவள்ளுவர் இந்து என்றால்,அவரது திருக்குறளை ஏற்க மாட்டார்களா, தமிழகத்தை ஆண்ட,தெற்காசியா முழுக்க படையெடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்த சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் நல்ல வேளையாக இந்து ஆலயங்களை கட்டினார்கள்.
இல்லையெனில் மாமன்னர் ராஜராஜ சோழனை எப்படி இந்து எனக் கூறலாம், ராஜராஜ சோழன் எப்படி சிவ பக்தனாக இருக்க முடியும், அவரது நெற்றியில் எப்படி விபூதி அணி விக்கலாம் என கேட்டிருப்பார்கள். திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழர் அடையாளத்தை அழித்து வரும் கூட்டம், திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை அழிக்கப் பார்க்கிறது.
அருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருநீறுடன்தான் காட்சி தருவார். ஆனால், சமீபகாலமாக திமுக அரசு வெளியிட்ட படங்களில் திருநீறு இல்லாமல் வள்ளலார் படம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அழித்து, தமிழர்களுக்கு மதம் இல்லை என்று சொல்லி, மத மாற்றத்துக்கு துணை போகும் கூட்டம் தான் ஆளுநரை விமர்சித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT