Published : 02 Apr 2018 06:14 PM
Last Updated : 02 Apr 2018 06:14 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமருக்கு கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர புதுச்சேரி அரசுக்கு அனுமதி தராதது தொடர்பாக வாட்ஸ் அப்பில் விளக்கியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவிரி நதி நீரை புதுச்சேரி உட்பட 4 மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்கின்றன.. புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால் காவிரியின் கடைமடைப்பகுதியில் உள்ளது. இங்கு விவசாயிகள் காவிரி நதிநீரை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்துடன் நதி நீர் கிடைப்பது அவசியமாகிறது. குறைந்தளவு தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் காவிரி நதி நீர் விஷயத்தில் கடந்த பிப்ரவரி 16-ல் தீர்ப்பளித்துள்ளது. இதில் புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அதை ஆறு வாரத்துக்குள் அமைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசானது இத்தீர்ப்பில் விளக்கமும், 3 மாத அவகாசமும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி இறுதித் தீர்ப்புக்காக காரைக்கால் விவசாயிகள் நீண்டகாலமாக காத்திருந்துள்ளனர். தற்போது இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. தற்போது மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியிருப்பது மூலம் புதுச்சேரி மக்கள் மத்தியில் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரத்தி்ல காரைக்கால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் துணை மனுவை தாக்கல் செய்ய அனுமதி தந்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக உத்தரவிடவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அவர் வெளியிட்ட தகவல்:
விவசாயிகள் நலன் பாதுகாப்பில் மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியுள்ளேன். இதில் ஆட்சியாளர்களுக்கும், நிர்வாகி அலுவலகத்துக்கும் (ஆளுநர் மாளிகை) இடையே ஒரேயொரு வேறுபாடு மட்டுமேயுள்ளது. புதுச்சேரி அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பானது. ஏனெனில் புதுச்சேரியானது தன்னிச்சையான அமைப்பு அல்ல. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசமாகும். அதனால்தான் வாரியம் அமைக்க துணைமனு தாக்கல் செய்ய அனுமதி தந்துள்ளேன். இதில் அரசுக்கும், ஆளுநருக்கும் வெவ்வேறான கருத்து இருப்பதால் இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்க மத்திய அரசை நாடலாம். அதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு தனியாக வேறொரு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT