Published : 25 May 2024 03:45 PM
Last Updated : 25 May 2024 03:45 PM

“அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது!” - இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது. பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய காவல் துறை, போக்குவரத்துத் துறை இடையிலான பனிப்போரை தடுக்கத் தவறி ஓர் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய இந்த திமுக அரசின் போக்கை கண்டிக்கிறேன். உடனடியாக இப்பனிப் போரை சரி செய்ய உரிய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள், தாங்கள் பணி செய்யும் மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கடந்த 2021-ல் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு, இந்த திமுக அரசின் மற்ற அறிவிப்புகளைப் போலவே வெற்று விளம்பரத்துக்கான கண்துடைப்பு அறிவிப்புதான் என்பதை, நாங்குனேரியில் காவலருக்கு இலவசப் பயணம் மறுக்கப்பட்டதும், அதற்கு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள விளக்கமும் தெள்ளத்தெளிவாக்கிவிட்டது.

திமுக அரசின் அறிவிப்புகள் சட்டப்பேரவை அறையை விட்டாவது வெளியே செல்கிறதா? அவர்களது, மொழியிலேயே சொல்லப்போனால் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற அளவில்தான் இருக்கின்றன உங்களுடைய அறிவிப்புகளும், திட்டங்களும். இந்நிலையில், இந்த திமுக அரசின் கீழ் இயங்கும் காவல்துறையினருக்கும், போக்குவரத்துத் துறையினருக்கும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மோதல் போக்கு உருவானதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஒரு அரசின் இரு துறைகள் மோதிக்கொள்ளும் செய்தி இதுவரை வரலாற்றில் யாரும் கேட்டிராதது.

திமுக அரசின் முதல்வர், திரைப்படக் காட்சி ஒன்றில் வருவதைப் போல, “எது பெரியதென்று அடித்துக் காட்டுங்கள்” என்ற மனநிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும், ஒரே ஒரு அறிவிக்கை மூலம் எப்போதோ தீர்த்திருக்க வேண்டிய சிறிய பிரச்சினைக்கு, மூன்று நாட்கள் கழித்து இரு துறைச் செயலாளர்களையும் அழைத்துப் பேசும் அளவுக்கு சென்றது. இந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, காவலர்களுக்கான இலவசப் பயணத்தை உடனடியாக அமல்படுத்துமாறும், இதனால் போக்குவரத்துத் துறைக்கு நிதி இழப்பு ஏற்படும்பட்சத்தில், அதனை அரசு சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய காவல்துறை, போக்குவரத்துத் துறை இடையிலான பனிப்போரை தடுக்கத் தவறி ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய இந்த திமுக அரசின் போக்கை கண்டிக்கிறேன். உடனடியாக இப்பனிப்போரை சரி செய்ய உரிய உத்தரவு பிறப்பித்து இயல்பு நிலைக்கு கொண்டு வர திமுக அரசை வலியுறுத்துகிறேன்”, என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x