Published : 25 May 2024 01:43 PM
Last Updated : 25 May 2024 01:43 PM
சென்னை: குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது, தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குரூப்-2 மற்றும் குரூப்-2 முதன்மைத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் பின்வரும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in/English/scheme.html மற்றும் www.tnpsc.gov.in/English/syllabus.html , என்று அவர் கூறியுள்ளார்.
புதிய பாடங்கள் சேர்ப்பு: புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப்-2 முதன்மைத் தேர்வில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்துடன் புதிதாக தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல்துறை ஆய்வுகள், திருக்குறள், சங்க இலக்கியம், தமிழகத்தில் நடந்த விடுதலை போராட்டங்கள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் குரூப்-2 -ஏ முதன்மைத் தேர்வு பாடத்திட்டத்தில் தமிழக நவீன வரலாறு, தமிழ் கலாச்சாரம், பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், சங்க இலக்கியம், தமிழக விடுதலை போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன், ரீசனிங் உள்ளிட்டவை தொடர்பான பாடங்களும் இடம்பெற்றுள்ளன. குரூப்-2 முதன்மைத்தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குரூப்-2ஏ முதன்மைத்தேர்வு கொள்குறி வகையிலும் (அப்ஜெக்டிவ் டைப்) அமைந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT