Published : 25 May 2024 11:01 AM
Last Updated : 25 May 2024 11:01 AM
சென்னை: விசிக விருதுகள் வழங்கும் விழா, சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் தொண்டாற்றும் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு " ஆகிய விருதுகள் விசிக சார்பில் வழங்கப்படுகின்றன.
இத்துடன் 2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ என்ற விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தாரமையா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் து.ராஜா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பலருக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான விசிக விருதுகள் கடந்த மாதம் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு அம்பேத்கர் சுடர், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு காமராசர் கதிர், பேராசிரியர் ராஜ்கௌதமனுக்கு அயோத்திதாசர் ஆதவன், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதேமில்லத் பிறை, கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT