Published : 17 Apr 2018 09:47 AM
Last Updated : 17 Apr 2018 09:47 AM

சில்..சில்.. சில்லக்குடி: சிங்கப்பூரிலிருந்து நீளும் உதவிக்கரங்கள்

மிழகத்தின் மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்தான் சில்லக்குடி. அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற கிராமம். சில்லக்குடி சில்லென மாறியதன் பின்னணியில் சிங்கப்பூர் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

சில்லக்குடியில் விவசாயம்தான் முக்கியத் தொழில். மழை போதிய அளவுக்கு இல்லை. மழையோடு விவசாயமும் பொய்த்துப்போனது. வறுமையை விரட்ட வேலை தேடி அலைந்த உள்ளூர் இளைஞர்கள் பலருக்கு அடைக்கலம் கொடுத்தது சிங்கப்பூர். 2000-ம் ஆண்டு வாக்கில் கூலி வேலைக்காகச் சென்றவர்கள், அங்கேயே பணியைத் தொடர்ந்தனர். 2005-ம் ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம். சில்லென இருந்த சில்லக்குடி வறட்சி யில் வதங்கியது.

சிங்கப்பூரில் இருந்தவர்களுக்கு ஊரின் நிலைமை வேதனை அடையச் செய்தது. தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் சொந்தங்கள் நிம்மதியாக இருக்க முடியும். அவர்கள் நிம்மதியாக இருந்தால் தான் சிங்கப்பூரில் நாம் நிம்மதியாக பணி செய்ய முடியும் என யோசித்தவர்கள், ஊருக்கு உதவ முடிவு செய்தனர்.

இதற்காக 20 பேர் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘சிங்கப்பூர் வாழ் சில்லக்குடி நண்பர்கள் குழு’. இந்தக் குழுவில் இருந்த 20 பேரும் சேர்ந்து ஊருக்காக நன்கொடை வழங்கினர். அதிலிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பில் ஊரில் முதல் ஆழ்துளை கிணறு, பம்ப் செட், தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. ஈரமுள்ள நெஞ்சங்களின் உதவியால் சில்லாக்குடியே நனைந்தது. ஊர் மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இதையடுத்து சிங்கப்பூர் வாழ் சில்லக்குடி நண்பர்கள் குழு ஊருக்கு தேவையான காரியங்களை தொடர்ந்து தொய்வின்றி செய்ய முடிவு செய்தது. இதற்காக ஒரு தொகையை நன்கொடையாக வழங்கி ஒரு நிதியத்தை உருவாக்கி, அதன்மூலம் வரும் வருவா யைக் கொண்டு, ஊரின் தேவையை பூர்த்தி செய்யத் தொடங்கியது.

20 பேரைக் கொண்டு தொடங்கிய நண்பர்கள் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளடைவில் 60 ஆக உயர்ந்தது. நிதியும் உயர்ந்தது. இப்படியாக கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட பணிகளால் சில்லக்குடி சிறப்படைந்தது.

இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளரான ராஜோக்கியத்தை சந்தித்தோம். ஊருக்குள் நடந்த பணிகளை நம்மிடம் அடுக்கத் தொடங்கினார்.

“சில்லக்குடி அரசு நடுநிலைப் பள்ளியை, உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளோம். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தேவையான ஒன்றரை ஏக்கர் நிலத்தை தனியாரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி அரசுக்கு ஒப்படைத்தோம். பள்ளிக்கு வேலி அமைக்கவும் குடிநீர், கழிப்பறைகள் வசதிகள், அறிவியல் ஆய்வகத்துக்கு தேவை யான உபகரணங்கள், மேசை, நாற்காலிகள் என பள்ளிக்கு தேவையான பலவிதமான பொருட்களை வாங்கிக் கொடுத்து அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு ஈடாக தரம் உயர்த்தியுள் ளோம்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரதம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை சிறப்பாசிரியர்களைக் கொண்டு கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

ஊருக்குள் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இதுவரை 4 ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி, மோட்டார் பம்ப்செட் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளோம். ஊரில் உள்ள கோயிலை புனரமைத்துள்ளோம். அறிவை விசாலமாக்க பெரியவர்களும் சிறுவரகளும் படிக்கும் வகையில், ‘மக்கள் படிப்பகம்’ எனும் பெயரில் ஒரு நூலகம் அமைத்திருக்கிறோம். தேவையான நூல்களையும் அடுக்கி வைத்துள்ளோம். இவைதவிர சாலை, தெருக்களை சீரமைத்தல் ஆகிய பணிகளும் தடையின்றி நடக்கின்றன” என்று கூறி முடித்தார்.

இதுபோக ஒரு திருமண மண்டபம் கட்டி குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகையையும் ஊருக்காக செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற் கான இடத்தையும் கூட நண்பர்கள் குழு வாங்கிவிட்டது.

நல்ல காரியங்களால் மட்டுமல்ல, கடல் கடந்து போனாலும் ஊரின் மீதும் உறவுகள் மீதும் வைத்திருக்கும் பாசத்தாலும் சில்லிட்டு கிடக்கிறது சில்லக்குடி. ஒருநாள் சில்லக்குடி சிங்கப்பூருக்கு இணையாக மாறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x