Published : 25 May 2024 06:20 AM
Last Updated : 25 May 2024 06:20 AM
தூத்துக்குடி: இந்திய கடலோர காவல் படை சார்பில், தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தேடுதல் மற்றும் மீட்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கடலோர காவல் படை கமாண்டிங் அதிகாரியான டிஐஜி டி.எஸ்.சவுகான் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் முன்னிலை வகித்தனர்.
கடலோரக் காவல் படையில் உள்ள வஜ்ரா, வைபவ், ஆதேஷ், அபிராஜ், அதுல்யா ஆகிய 5 ரோந்துக் கப்பல்கள், ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை இதில் ஈடுபட்டன.
தூத்துக்குடியில் இருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் ஒரு சரக்கு கப்பலில் தீப்பிடித்த நிலையில், கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் விரைந்து சென்று தீயை அணைப்பது போலவும், கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவது போலவும் ஒத்திகை நடைபெற்றது.
அதேபோல, நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தால், அதில் மீட்புப் பணிகளைக் கையாள்வது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது மீட்பு படகுகள், கப்பல் மருத்துவமனை உள்ளிட்டவை விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தன.
மேலும், டோர்னியர் விமானம் தாழ்வாகப் பறந்துசென்று, விபத்தில் சிக்கி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்பதுபோலவும் ஒத்திகை நடைபெற்றது. இதையொட்டி கடலில் வீசப்பட்ட மிதவையில் விபத்தில் சிக்கியவர்கள் ஏறி அமர்ந்து, அதில் உள்ள உணவு, தண்ணீர், மருந்துகளை 3 நாட்களுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கப்பட்டது.
தொடர்ந்து, கப்பல்கள் செல்ல முடியாத பகுதியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய மீட்புப்படகை அனுப்பி, கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது, ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி மீட்பது போன்ற ஒத்திகைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், மீன்வளத் துறை உதவி இயக்குநர் விஜயராகவன், கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறை டிஎஸ்பி பிரதாபன், ஆய்வாளர் சைரஸ்மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT