Last Updated : 24 May, 2024 09:05 PM

5  

Published : 24 May 2024 09:05 PM
Last Updated : 24 May 2024 09:05 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் கிளப்பிய திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை - ஆய்வுகள் சொல்வது என்ன?

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து, தமிழக அரசியலில் வள்ளுவரை மையமிட்டு, ‘ஆரிய - திராவிட’ விவாத நெருப்பை அவ்வப்போது பற்ற வைத்து வருகிறார். அதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்தாலும் அவர் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. 23-ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ‘திருவள்ளுவர் திருநாள் விழா’ அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு பல தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘‘திருவள்ளுவரை காவி உடையில் வைத்து ஆளுநர் அவமானப்படுத்தப் பார்க்கிறார். உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் அவமதிக்கிறார்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு முன்பும் திருவள்ளுவர் தினத்தன்று ஆளுநர் ரவி, ‘‘ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்’’ எனக் குறிப்பிட்டார். அவரது பதிவில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவர் பட்டத்தையும் பதிவிட்டிருந்தார். அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் காவி மற்றும் பூணூல் அணிந்த திருவள்ளுவரை படத்தைப் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து மதத்தைச் சேர்ந்தவர் திருவள்ளுவர் என்பதைச் சொல்ல காவி நிறம், பூணூல் அணிந்து பதியப்படும் திருவள்ளுவர் படத்திற்கு எதிராக, திராவிட சிந்தாந்தம் கொண்டவர்கள் கருப்பு நிற உடையணிந்த திருவள்ளுவர் படங்களைப் பதிவிடுகின்றனர். அதேபோல், திருவள்ளுவர் சமணத்தைச் சேர்ந்தவர் என்னும் அடிப்படையில் வெள்ளை நிற ஆடையும் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் வரலாறு சொல்வது என்ன? - ‘கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டு வருகிறது’ எனக் கருத்துரைக்கும் ஆய்வாளர்கள், அதற்கு எதிராக முன்வைக்கும் கருத்துகளையும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் மற்றும் தரவுகள் குறித்து பார்க்கலாம். ஆய்வாளர் ஜெயஸ்ரீ சாரநாதன், ‘திருவள்ளுவர் பூணூல் அணிந்த இந்து’ என்பதற்கு சில அடையாளங்களைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, மயிலாப்பூரில் நடந்த அகழாய்வில் 14, 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வள்ளுவர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், திருவள்ளுவர் பூணூல் அணிந்திருப்பதால் அவர் இந்து. மேலும் வள்ளூவர் கை ‘சின் முத்திரை’யைக் காட்டுகிறது. அது இந்து குருக்களால் காட்டப்படும் முத்திரை. அதனால் அவர் இந்து மதத்தைப் பின்பற்றியவர்.’ என்று விளக்கியிருக்கிறார்.

ஆனால், ஜெயஸ்ரீ காட்டும் வள்ளுவர் சிலை ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையைத்தான் இவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இந்த சிலையைக் அகழாய்ந்து எடுத்த தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா.கிருஷ்ணமூர்த்தி, ‘‘இச்சிலையின் உருவம் பீடத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. தியான நிலையில் வலக்கை சின் முத்திரையுடன் அக்க மாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும் பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன.

தமிழக அரசின் மூலம் பிரபலமாகி இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவப் படமும் ஏறத்தாழ இக்கற்சிலையின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம். இக்காசில் கணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவகங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஆயினும், ஒரு முக்கிய வேறுபாடும் பளிச்சென்று தெரிகிறது. காசில் உள்ள முனிவரின் திருவுருவத்தில் தலை மழித்தும், முகத்தில் தாடி மீசை இன்றியும் குறிப்பிடத்தக்க வேறுபாடாக இருக்கிறது’’ என அவர் கூறியிருக்கிறார்.

அதில் கட்டுரையாளர் ஐராவதம் மகாதேவன், “இக்காசில் முனிவரின் தலை மீதுள்ள குடையையும், மழித்த தலையையும், முகத்தையும் காணும் போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. திருக்குறளில் 'ஆதி பகவன்', 'மலர்மிசை ஏகினான்', 'அறவாழி அந்தணன்' போன்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்வதற்கு வலுவான சான்றுகள் ஆகும்’ எனக் கூறியுள்ளார்.

பூணூலில் ஏற்படும் முரண்பாடு! - சிலையில் பூணூல் அணிந்திருப்பதைத்தான் முக்கியமான சான்றாகக் குறிப்பிட்டு வள்ளுவர் இந்துமதத்தைச் சேர்ந்தவர் என ஜெயஸ்ரீ சாரநாதன் உள்ளிட்ட சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால், திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட சமண நூலான சீவக சிந்தாமணியில் சமணர்கள் பூணூல் அணிந்ததற்குப் பல சான்றுகள் இருக்கின்றன.

‘‘நறுமண நெய் மேனியில் பூசி நன்னீரில் நீராடச் செய்து
தூய நல்ல ஆடைகள் தந்து துலங்கும் பொன் பூணூல் தந்து
செம்பொன் கலத்தினிலே செங்கர மகளீர் உணவு தர
அறுசுவை கொண்ட உணவை அகமகிழ்வில் உண்டான் அவன்”
(சீவக சிந்தாமணி, சுரமஞ்சரியார் இலம்பகம், 657.)

இப்படி சமணர்கள் பழங்காலத்தில் பூணூல் அணிந்ததை சீவக சிந்தாமணி பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இப்படியாகப் பல தமிழ் இலக்கிய நூல்களில் சமணர்கள் பூணூல் அணிந்தது தொடர்பான குறிப்புகள் உள்ளன.

இது குறித்து முத்திரை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் கரு.ஆறுமுகத் தமிழன் பேசுகையில், “நம் வாயில் வெளிப்படுத்தாத விவரங்களைக் கைகளில் முத்திரையில் வெளிப்படுத்துவது. இதனை யோகத்துடன் தொடர்பு படுத்த தேவையில்லை. ‘யோகா’ வாயில் பேசக்கூடியது அல்ல. அதனால் அங்கு முத்திரைகள் பயன்படுத்தப்பட்டன. திருவள்ளுவர் அறிவு சார்ந்து விவரங்களை வெளிப்படுத்தும் போது எதற்காக முத்திரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

திருவள்ளுவருக்கு முத்திரை வைத்து விளக்க வேண்டிய அவசியமில்லை. கலைஞர் கட்டிய திருவள்ளுவர் சிலையில், திருக்குறளில் மூன்று பால் இருப்பதால் அதனை சுட்டும் வகையில் மூன்று விரல் காட்டப்பட்டது. உலகப் பொதுமறை பேசக் கூடியவருக்கு மதங்களைப் பூச நினைப்பது அவசியமற்றது” என்றார்.

தமிழக பண்பாட்டினைப் பொறுத்துவரையில் அறத்தின் வழி பொருள் ஈட்டி இன்பமாக இருக்க வேண்டுவது என தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் எடுத்துரைத்தது.

”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்'
என்னும் தொல்காப்பிய (களவியல்- நூற்பா:1)”

அதைத் தான் முப்பாலாக திருக்குறளும் கூறுகிறது. ஆனால், வேத மரபு என்பது அறம், பொருள், இன்பம், மோட்சம் என கடவுளிடம் செல்வதற்கு தான் வாழ்க்கை எனக் கற்பிக்கிறது. ஆகவே, தமிழர்களின் இந்த மூன்று மரபுகளை எடுத்துரைக்க மூன்று விரல்களைச் சுட்டும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டடுள்ளது.

திருக்குறளுக்கு உரை எழுதிய எழுத்தாளர் மகுடேஷ்வரன், “நான் அய்வு மேற்கொண்டவரையிலும் திருவள்ளுவர் சமணர் என்றுதான் அறியப்படுகிறார். அவர் கருத்துகள் சமண மதத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. திருவள்ளுவர் சமண மதத்தைத் சார்ந்தவர் என்ற கருத்துகள்கூட சொல்லப்படுகின்றன. குறிப்பாக, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் சமணம் பரவிய காலகட்டம்.

ஆனால், உலகப் பொதுமறை எழுதியவரைப் பொதுவானவராகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். வரலாற்று ஆய்வுகள் எல்லாமும் அவர் இந்த குறிப்பிட்ட மதம் என்பதை உறுதிப்படுத்த முயல்கிறது. ஆனால், அவரின் மதத்தைக் கடந்து கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வதே மிகச் சரியாக இருக்கும்” எனக் கூறினார்.

ஆனால், ஆய்வாளர்களும் கூட திருவள்ளுவரின் மதத்தைக் கடந்து அவரின் கருத்துகளை மட்டுமே உற்று நோக்க வேண்டும் என்கின்றனர். அரசியல் சாயம் பூசக் கூடாது’ என்பது அவர்களின் கருத்தாகவுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வள்ளலார், திருவள்ளுவர் போன்ற பெருமகன்களின் ஆதி தோற்றங்கள் மாற்றப்படுவதற்கான காரணம் அரசியல் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x