Published : 24 May 2024 11:45 AM
Last Updated : 24 May 2024 11:45 AM
திருப்பூர்: திருப்பூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டது.
திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபாண்டி (38). இவரது மனைவி சுடர்கொடி (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று (மே 24) சுடர்க்கொடி இருசக்கர வாகனத்தில் வீரபாண்டிக்கு வந்துவிட்டு குழந்தைகளுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த வாகனம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் மற்றும் சுடர்கொடியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் அது தொடர்பான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுடர்கொடி மூளைச்சாவு அடைந்தார்.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் சுடர்க்கொடி உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி தனியார் மருத்துவமனையில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுடர்கொடியின் உடல் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவமனை நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் அனுமதி பெற்று மருத்துவ குழுவினர் சுடர்கொடியின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினர்.
இந்த உறுப்புகள் மூலம் பலர் பயனடைவதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்ததாக சுடர் கொடியின் உறவினர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த சுடர்கொடியின் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT