Published : 22 May 2024 07:17 PM
Last Updated : 22 May 2024 07:17 PM
மதுரை: மீன்பிடி தடைக் காலத்தில் இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் முகமது, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக கடல் பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிக்க ஆண்டு தோறும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாள் வரையும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாள் வரையும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் இயந்திரம் பொருத்தாத பாரம்பரிய படகுகளில் மீன்பிடிக்கலாம். இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்க அனுமதியில்லை.
இந்தத் தடையால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு அரசின் உத்தரவுக்கு இயந்திரப் படகு உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இருப்பினும் மீன்பிடி தடை காலத்தை மீறி சிலர் பாரம்பரிய மீன்பிடி படகுகள் என்ற பெயரில் இயந்திரப் படகுகளில் சென்று மீன்பிடிக்கின்றனர். எனவே, மீன்பிடி தடை காலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் மீன்பிடிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மஞ்சுளா, குமரப்பன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மீன்பிடி தடைக் காலம் உள்ள நிலையில் இயந்திரப் படகுகளில் சென்று மீன்பிடிக்க எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் மீன்வளம் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இயந்திரப் படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT