Published : 22 May 2024 02:33 PM
Last Updated : 22 May 2024 02:33 PM
சென்னை: இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து தினசரி மின்தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இம்மாதம் 2-ம் தேதி தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், இந்த மின்தேவையை மின்வாரியம் எளிதாக சமாளித்தது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, “இந்த ஆண்டு கோடை வெயிலின் போது தினசரி மின் தேவை மிக அதிகபட்சமாக 20,830 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. மின்வாரியம் மின் தேவையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக, சொந்தத் தேவை, மத்திய தொகுப்புகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததோடு, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்படி, குறைந்தகால ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,755 கோடி மதிப்பில் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின்தேவை கணிசமாக குறைந்துள்ளது. எனினும், குறைந்தபட்ச மின் தேவையை சமாளிக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT