Published : 22 May 2024 12:03 PM
Last Updated : 22 May 2024 12:03 PM

ரயிலில் சிக்கிய ரூ.3.98 கோடி: சிபிசிஐடி வழக்குக்கு தடை கோரி பாஜக அமைப்புச் செயலாளர் மனு

சென்னை: தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.98 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான சிபிசிஐடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் 3 பேரிடமிருந்து ரூ. 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக தமிழ்நாடு அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

ஆனால், எந்தக் காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி, சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாட்டில் பாஜகவின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள கேசவ விநாயகன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணை சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x