Published : 22 May 2024 04:48 AM
Last Updated : 22 May 2024 04:48 AM
சென்னை: வாக்குகளுக்காக தமிழக மக்களைஅவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிக்க வேண்டும்.
இதில், முன்னுதாரணமாக திகழ வேண்டிய பிரதமர் மோடி,வெறுப்பு பேச்சுகள் மூலம் மக்கள் இடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஏற்கெனவே, உத்தர பிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாக தமிழக மக்கள் மீது அபாண்ட பழியை சுமத்தி இருந்தார். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களை தூண்டிவிடும் செயல்ஆபத்தானது என்று அப்போதே இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தேன்.
தற்போது, ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள்தமிழகத்தில் இருப்பதாக பேசிஉள்ளார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதுடன், ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும், நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும், புண்படுத்துவதும் ஆகும்.
ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை, தமிழக மக்களுக்கு எதிராக தூண்டும் பேச்சாக இது உள்ளது.
தமிழகத்தை அவமதிக்கிறார்: ஆலயத்தின் பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என கூறுவது, தமிழகத்தை அவமதிப்பதுபோல உள்ளது.
தமிழர்கள் மீது பிரதமர் மோடிக்கு இத்தனை காழ்ப்பும், வெறுப்பும் ஏன்? தமிழகம் வரும்போது தமிழ்மொழியை உயர்வாக போற்றுவதாகவும், தமிழர்களைப்போல அறிவாளிகள் இல்லை என்றும் பாராட்டி பேசினார்.
அதேநேரம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களை திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும், அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
எனவே, வாக்குக்காக தமிழகத்தையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முதல்வர்ஸ்டாலின் நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் தனது தமிழ் பற்றாளர் வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி.ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளை களவாடும் திருடர்கள்போலதமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியுள்ளார். வடக்கில் தமிழர்களை காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தை தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்து கொள்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT