Published : 21 May 2024 07:56 PM
Last Updated : 21 May 2024 07:56 PM
சென்னை: தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து, அதை வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானுக்கு, பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யூடியூபர் இர்ஃபான் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும், அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின்போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து மே 19-ம் தேதியன்று, தனது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994-ன் படி (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரால் இர்பானுக்கு இன்று (மே 21) பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இர்ஃபானால் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்துக்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவுக்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT