Published : 21 May 2024 03:33 PM
Last Updated : 21 May 2024 03:33 PM
சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை விடிய விடிய பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல், ஏற்காட்டில் உருவான திடீர் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் வாட்டி வதைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 3 மணி அளவில் சேலத்தில் துவங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 வரை 12 மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.
மழையின் காரணமாக சேலத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, பழைய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரப் பகுதியில் 76.9 மில்லி மீட்டர் மழை அளவு பெய்துள்ளது. ஏற்காட்டில் 88.6 மில்லி மீட்டர் அளவும், சங்ககிரியில் 79.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
அதேபோல , சேலம், ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக கடும் பணி மூட்டம் நிலவி வருகிறது. ஏற்காடு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளுமையான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சி உருவாகி ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது . ஏற்காடுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திடீர் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து, அதில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
கால்வாயில் விழுந்து உயிர் தப்பிய சிறுவன்: சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பலத்த மழை காரணமாக சாலையில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாயில் நீர் நிரம்பி சாலையில் மழை நீர் சென்றதால், கால்வாய் எது என்று தெரியாத நிலையில் அங்கு நடந்து சென்ற சிறுவன் சாக்கடையில் விழுந்துள்ளார். அப்போது , அருகில் இருந்தவர்கள் கவனித்து உடனடியாக ஓடிச் சென்று சிறுவனை மீட்டனர் . இதனால் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் . இதேபோல, சேலத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் : சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் முழுவதுமாக மழை நீர் தேங்கி நிற்பதால், விளையாட்டு வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமையும் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் தேங்கிய பகுதியில் சேலம் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT