Last Updated : 21 May, 2024 10:52 AM

 

Published : 21 May 2024 10:52 AM
Last Updated : 21 May 2024 10:52 AM

சிலந்தி, சிறுவாணி ஆறுகள் குறுக்கே தடுப்பணை - கேரளா மீது வழக்கு; சீமான் வலியுறுத்தல்

சீமான்

சென்னை: சிலந்தி, சிறுவாணி ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

கடந்தகால திமுக ஆட்சியில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அடுத்தடுத்து அணைகளைக் கட்டி காவிரிப்படுகையை வறண்ட நிலமாக்கியது. அதைத்தொடர்ந்து தற்போது மேகேதாட்டு அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது.

அதேபோல பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ.215 கோடி ஒதுக்கியுள்ளது. முக்கியமாக உலகின் மிகச்சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்றான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு ஏற்கனவே தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளதுடன், மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை கட்ட முயல்வது தமிழகத்தை பாலைவனமாக்கும் செயலாகும். திமுகவின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமை ஒவ்வொன்றாகப் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது. இரு மாநிலங்களுக்கு இடையிலான நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதலின்றித் தன்னிச்சையாக எவ்வித அணையும் கட்டமுடியாது. கேரள அரசு, தமிழக அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

எனவே சிலந்தி மற்றும் சிறுவாணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டிவரும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். தமிழர்களின் நதிநீர் உரிமை பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x