Published : 20 May 2024 09:27 PM
Last Updated : 20 May 2024 09:27 PM
மதுரை: மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதியை இன்று வழங்கியுள்ளது. அதனால், கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது 2024 மக்கவைத்தேர்தல் முடியும் நிலையில் இன்னும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு, ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜைக்காவுடன் கடனுக்கான ஒப்பந்தத்தில் 2021 மார்ச்சில் கையெழுத்திட்டது.
மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82 சதவீதம் தொகையான ரூ.1627.70 கோடிகளை ஜைக்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள 18 சதவீதம் தொகையை மத்திய அரசு நேரடியாக வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. ஜைக்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை வரப்பெற்றுள்ளதாகவும், அதனால் 33 மாதங்களில் விரைந்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் கட்டுமானப்பணி இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி (L&T Construction) என்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதியை இன்னும் பெறவில்லை என்ற தகவல் வெளியானது. உடனடியாக ‘எய்ம்ஸ்’ நிர்வாகமும், தானே முன் வந்து, எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில் கட்டுமான (Pre construction) பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், கடந்த மே 2-ம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக, மதிப்பீட்டு ஆய்வறிக்கையை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் மே 10-ம் தேதி, இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. எனவே, விரைவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT