Published : 20 May 2024 08:51 PM
Last Updated : 20 May 2024 08:51 PM
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (மே 19) இரவு முதல் கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று (மே 20) காலை 8 மணி நிலவரப்படி கொடைக்கானல் ரோஜா பூங்கா பகுதியில் 29.50 மி.மீ. பிரையன்ட் பூங்கா பகுதியில் 28 மி.மீ. மழை பதிவானது.
கொடைக்கானல் மேல்மலையான பழம்புத்தூர் கிராமத்தில் இருந்து பள்ளங்கி கோம்பை வழியாக மூங்கில்காடு கிராமத்தை கடந்து செல்லும் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றைக் கடந்து கிராமத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஆபத்தான முறையில் கயிற்றை கட்டி மலைக் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.
பலத்த மழை காரணமாக இன்னும் சில மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வீடுகளில் முடங்கினர். இப்பகுதியில் ஆற்றைக் கடந்து செல்ல நிரந்தரப் பாலம் கட்டித்தர வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மலைக் கிராமக்களுக்கு தேவையான உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT