Published : 20 May 2024 07:41 PM
Last Updated : 20 May 2024 07:41 PM
ஓசூர்: கெலமங்கலம் அருகே ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மொபைலுக்கு வந்த குறுஞ்செய்தியால் விவசாயி அதிர்ச்சியடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ். இவரது வீட்டில் குறைந்தளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது மொபைலுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தப்படும் மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 செலுத்த வேண்டும் என மின்துறையிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் தனது மின் கட்டணத்தை முறையாக சரி செய்து தருமாறு கெலமங்கலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வெங்கடேஷ் கூறும்போது, “எனது வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில் பணிக்காக வெளியூர் சென்று விடுவதால், மின்சாரம் பயன்பாடு குறைவாக இருக்கும்.
இதனால் இரு மாதங்களுக்கு ஒரு முறை வரும் மின் கட்டணம் மிகவும் குறைவாக வரும். இதனால், 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால்,ரூ.100 மட்டும் செலுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பயன்படுத்திய மின்கட்டணம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 கட்டணம் செலுத்த வேண்டும் என மின்துறையிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்து மின்துறையிடம் புகார் அளித்துள்ளேன்” என கூறினர்.
இது குறித்து மின்துறை அதிகாரிகள் கூறும் போது, “மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வந்த புகாரை விசாரணை செய்தோம். அதில் பூஜ்ஜியத்துக்கு பதிலாக 8 பதிவாகி உள்ளது. இதனால் உடனடியாக அந்த பில் திரும்பபெறப்பட்டது. அவர் பில் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை” என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT