Published : 20 May 2024 07:35 PM
Last Updated : 20 May 2024 07:35 PM
திருச்சி: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை அமைக்க வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், சிவாஜிக்கு சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடம் தேர்வு, அனுமதி கோரும் பணிகள் முடிவதற்கு முன்பே, திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில், 2011-ம் ஆண்டு 9 அடி உயர சிவாஜி சிலை நள்ளிரவில் நிறுவப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்காததால், சிவாஜி சிலை திறக்கப்படாமல், கடந்த 13 ஆண்டுகளாக சாக்குப் பையால் மூடிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவாஜி சிலையை திறக்கக்கோரி, திருச்சியைச் சேர்ந்த சிவாஜி ரசிகர் மன்ற உறுப்பினர் மோகன் பாலாஜி என்பவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொது இடங்களில் தலைவர்கள் சிலை அமைக்கக் கூடாது என்று ஏற்கெனவே உள்ள உத்தரவை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சிவாஜி சிலையை முக்கியத்துவம் வாய்ந்த வேறு இடத்தில் நிறுவ அறிவுறுத்தியது.
இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வான இனிகோ இருதராஜ் தலைமையில், திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாநகர் ரெக்ஸ், வடக்கு கலைராஜன், தெற்கு கோவிந்தராஜன், சிவாஜி ரசிகர் மன்றச் செயலாளர் எம்.சீனிவாசன், உறுப்பினர் மோகன் பாலாஜி ஆகியோர் பாலக்கரையில் மூடப்பட்டிருக்கும் சிவாஜி சிலையை இன்று பார்வையிட்டனர்.
அதன் பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின், சிவாஜி சிலை நிறுவுவதற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததால் சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT