Published : 20 May 2024 02:46 PM
Last Updated : 20 May 2024 02:46 PM
சென்னை: ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சியுடன் ஒப்பிடுவது மனசாட்சிக்கு விரோதமானது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வதற்குகூட காங்கிரஸ் கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகைக்கும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் தைரியம் இல்லாமல் போய்விட்டது. அதுகூட பரவாயில்லை, காமராஜர் ஆட்சி தான் ஸ்டாலின் ஆட்சி என மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்கிறார்கள். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி. அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு அணைகளை கட்டி உள்ளார்.
ஆனால், அவர் கட்டிய அணைக்கட்டுகளில் அடியில் மண்டி இருக்கும் மண் சகதிகளைக்கூட அகற்ற இயலாத ஆட்சியாக தான் திமுக ஆட்சி இருக்கிறது. நூற்றுக்கணக்கான அணை கட்ட வேண்டிய நிலை மற்றும் வாய்ப்பு இருந்தும் கூட அதில் திமுக கவனம் செலுத்தவில்லை. காமராஜர் தொடங்கி வைத்த அத்திக்கடவு - அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பாசன திட்டங்கள் இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தொழில் வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து சமூக நீதியை நிலைநாட்டியவர் காமராஜர்.
ஆனால், கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து லாபம் ஈட்டும் தொழிலாக திமுக மாற்றி இருக்கிறது. மேலும், மாணவர்களிடையே போதை கலாச்சாரம் பரவியுள்ளதை தடுக்க முடியாமல் திணறுகிறது. நாட்டுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர் காமராஜர். ஊழல் செய்து சிறைக்கு செல்கின்றனர் திமுகவினர். காங்கிரஸ் கட்சியை நாடு முழுவதும் வழிநடத்திய ஒரு தேசிய தலைவர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்வதைக்கூட செல்வப் பெருந்தகையும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பதவிக்காக சொல்ல பயப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT