Published : 20 May 2024 04:25 AM
Last Updated : 20 May 2024 04:25 AM
சென்னை: அந்தமானில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 22-ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்தமான், குமரிக்கடல் பகுதிகளில்ஏற்கெனவே கணித்தபடி நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 31-ம் தேதி வாக்கில் கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி தமிழகத்தில் இருந்து விலகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 20) முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை: இன்று தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை,நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
21-ம் தேதி (நாளை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
23-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஜமுனாமரத்தூரில் 12 செ.மீ. மழை: நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம்ஜமுனாமரத்தூரில் 12 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 10 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, ஆம்பூரில் 9 செ.மீ.,கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 8 செ.மீ., திற்பரப்பு, சிற்றாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை,திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் 7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, முள்ளங்கினாவிளை, களியல், சிவலோகம், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை, நீலகிரி மாவட்டம் கேத்தி, கோவை மாவட்டம் வால்பாறையில்6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் 23-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் 55 கி.மீ.வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT