Published : 19 May 2024 07:20 PM
Last Updated : 19 May 2024 07:20 PM
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உடல் நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு அவருடன் காவலர் பயிற்சி பெற்ற குழுவினர் நிதியுதவி வழங்கினர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோலையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணா (51). கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி பணியின்போது உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இவர் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவருடன் 3500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நட்பில் உள்ளனர். தங்களுடன் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உதவும் வகையில் மாதம் ரூ.500 வீதம் உதவும் உறவுகள் அமைப்பு என்ற பெயரில் நிதி சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்படும் காவலர் குடும்பத்துக்கு இந்த நிதியிலிருந்து உதவி வருகின்றனர்.
அதன்படி, உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாவின் குடும்பத்துக்கு உதவியுள்ளனர்.
கருணாவின் மகன் விஜய் ஆதித்யா என்பவரது அஞ்சல் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் வைப்பு நிதி மற்றும் குடும்ப பராமரிப்பு செலவுக்கு கருணாவின் மனைவி லைலாவிடம் ரொக்கமாக ரூ. 3 லட்சத்து 75 ஆயிரத்து 600 வழங்கினர். இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டு கருணாவின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காவலர்களின் இந்த உதவியை பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT