Published : 19 May 2024 06:57 PM
Last Updated : 19 May 2024 06:57 PM
மதுரை: ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க அதிமுக தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க திட்டமிட்டதாகவும், இதற்கு திரை மறைவில் ரகசிய முயற்சி நடந்ததாகவும் உண்மைக்கு புறமான செய்திகள் வருகின்றன. மேலும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தேர்தல் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கற்பனை கலந்த செய்திகள் வெளிவந்துள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர். ஜெயலலிதா தன்னுடைய உயிரைக் கொடுத்து உருவாக்கிய இந்த அரசை கலைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்த போது அதற்கு ஆதரவு நிலையை உருவாக்கி தனது எதிர்ப்பை சட்டசபையில் பதிவு செய்தவர். கட்சிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் செய்தாலும், ஒற்றுமை முக்கியம் என்று கருதி கட்சியில் மீண்டும் சேர்த்து முக்கிய பொறுப்புகள் வழங்கி ஆட்சியில் துணை முதல்வர் பதவி வழங்கி, வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மூன்று முறை முதல்வராக இருந்தவர், தற்போது அதிமுக கொள்கையில் இருந்து விலகி உள்ளார். அதிமுகவுக்கு எதிரி என்றால் திமுக என்ற நிலையிலே எங்களை எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தார்கள். இந்த நிலையில் பின்வாங்காமல் எடப்பாடி பழனிசாமி நெஞ்சுரத்துடன் போராடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அதை பன்னீர்செல்வம் குழி தோண்டி புதைத்தார். பிறகு எப்படி ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
ஒற்றை சீட்டுக்காக அதிமுகவை எதிர்த்து, இரட்டை இலையை தோற்கடிக்க ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். இது எந்த விதத்தில் நியாயம்? எதற்காக இந்த பாவச் செயலை செய்கிறார்? தனக்கு பதவி அதிகாரம், இல்லை என்றால் கட்சியை சின்னாபின்னமாக்க எந்த நிலைக்கும் அவர் போவார். மீண்டும் பன்னீர்செல்வத்தை சேர்க்கும் விஷப் பரீட்சையை அதிமுகவின் எந்த தொண்டரும் விரும்பவில்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க அதிமுக தயாராக இல்லை”, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT