Published : 19 May 2024 04:35 AM
Last Updated : 19 May 2024 04:35 AM
சென்னை: மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மலிவான உத்தியை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெற்றி முகட்டை நோக்கி இண்டியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரைகளை பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும், அதைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்று தமிழக மக்களும், சமூகநீதியின் மேல் ஆழ்ந்த பற்றுகொண்ட தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்தக் குரல் காங்கிரஸ் கட்சியாலும், இண்டியா கூட்டணிக் கட்சிகளாலும் அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. உத்தரப்பிரதேச மக்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடிய இதுகுறித்து, பிரதமர் மோடி என்றைக்காவது வாய் திறந்திருக்கிறாரா?
மதவெறுப்பு பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தரப்பிரதேச மக்களை, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை, பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.
உண்மையில், வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளவும், சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும் செயலாற்றும் மணீஷ் கஷ்யப் போன்ற யூடியூபர்களைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலி செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பாஜகதான்.
பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள்நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்து, அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப் புரளி கிளப்பி இருக்கிறார். 2019-ல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-ல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல் அந்தத் திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, இந்த உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார்.
பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகிறாரோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுஇவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT