Published : 18 May 2024 05:23 PM
Last Updated : 18 May 2024 05:23 PM
விழுப்புரம்: “அண்ணாவின் திசையிலிருந்து மாறி, இன்று திமுக என்றாலே ஊழல் ஊழல்தான். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள்தான் தற்போது திமுகவில் உள்ளனர்” என்று முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான ஏ.ஜி.சம்பத் கூறியுள்ளார்.
“ஏழை எளியோரின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றி மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும்” என்று சட்டமன்றத்தில் 2021-ம் ஆண்டு செம்டம்பர் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஏ.கோவிந்தசாமியின் 55-ம் ஆண்டு நினைவுநாள் விழுப்புரத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான ஏ.ஜி.சம்பத் தனது தந்தை ஏ.கோவிந்தசாமியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், “ராமசாமி படையாச்சியார் உழவர் உழைப்பாளர் கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியில் செயலாளராக என் தந்தை ஏ.கோவிந்தசாமி செயல்பட்டார். உழவர் உழைப்பாளர் கட்சியின் வளர்ச்சியைப் பிடிக்காத நேரு, ராஜாஜிக்கு கட்டளையிட்டதன் பேரில் அக்கட்சியை கலைக்க முடிவெடுத்து செயல்பட்டார். அதனால் ராமசாமி படையாச்சியார் காங்கிரஸில் இணைந்தார்.
வேறு வழியின்றி, அக்கட்சி கலைக்கப்பட்டவுடன், உழவர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, அதற்கு தேர்தல் ஆணையம் மூலம் உதயசூரியன் சின்னத்தை பெற்றார் எனது தந்தையார் ஏ.கோவிந்தசாமி. பின்னாளில் அச்சின்னம் எனது தந்தையாரால் திமுகவுக்கு மனமுவந்து கொடுக்கப்பட்டது. அதனால், உதய சூரியன் சின்னம் விவகாரத்தில் எவ்வித சிக்கலும் செய்யக்கூடாது என்று உறுதியாக உள்ளேன்.
2020-ல் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சமயத்தில் அறிவிக்கப்பட்ட என் தந்தையாரின் மணி மண்டபப் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. என் தந்தையார் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தார். 1969-ல் எனது தந்தையார் இறக்கும் முன்பு கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் உள்ளிட்டோர் முன்னிலையில், ‘நான் ஏழையாகப் பிறந்தேன். ஏழையாகவே சாகிறேன். நான் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை’ என்று கூறி மறைந்தார்.
நான் திமுகவை விட்டு விலக காரணம் என்னவென்றால் இன்று திமுக ஊழல் செய்வதையும், கொள்ளையடிப்பதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது. அண்ணாவின் திசையிலிருந்து மாறி, இன்று திமுக என்றாலே ஊழல் ஊழல்தான். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள்தான் தற்போது திமுகவில் உள்ளனர்.
அண்ணா ஆரம்பித்த திமுக ஏழை மக்களுக்கான கட்சி. என் தந்தையாரைப் போல அண்ணா எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். அப்படித்தான் பிரதமர் மோடி உள்ளிட்டோரும் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள். அந்த ஒற்றைப் புள்ளியை வைத்துத்தான் என் தந்தையார் எப்படி வாழ்ந்தாரோ... எந்தப் பாதையைக் காட்டினாரோ, அந்தப் பாதையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பாஜகவில் பயணிக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT