Published : 18 May 2024 03:37 PM
Last Updated : 18 May 2024 03:37 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி.4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் காந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டிசேரி எனும் இடத்தில், பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்துபட்டிசேரி அணை கட்டப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அனைத்துகட்சியினரும் கடும் ஆட்சேபனைதெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமராவதி அணைக்கு வந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு சங்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவக்குமார் கூறும்போது, ‘‘அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான்.
எனது தலைமையில் விவசாயிகள் அடங்கியகுழு நேரில் ஆய்வு செய்து அதனைஉறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது. தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது.அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கேஅணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணையை தாண்டி ஒருசொட்டுநீர் கூட அமராவதி அணைக்குவராது. இதுபோன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவனமாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது.
இது குறித்த விழிப்புணர்வு பாசனவிவசாயிகள் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கும் கிடையாது. கேரளத்தின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல். கேரளத்தின் இந்த செயலை கண்டித்து, வரும் 27-ம் தேதிதாராபுரத்திலுள்ள அமராவதி அணைசெயற்பொறியாளர் அலுவலகம்முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இதுதொடர்பாக எழுந்துள்ள புகார் அடிப்படையில் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் குழுவை, சம்பவ இடத்துக்கு அனுப்பிவைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்ட ஆய்வில் சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் தேனாற்றின் ஒரு பகுதிதான். குடிநீர் தேவைக்காக அணை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இது காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்புக்கு எதிரானதா? என்பதை துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்யும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT