Published : 18 May 2024 02:02 PM
Last Updated : 18 May 2024 02:02 PM

3 மாதத்தில் கோட்டை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை மற்றும் தண்டவாளம் அமைக்கும் பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிந்துவிடும். அதன்பிறகு, வேளச்சேரி முதல் கோட்டை ரயில் நிலையம் வரை பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது இரண்டு ரயில் தடங்களில் புறநகர் ரயில்களும், இன்னொரு தடத்தில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை இருக்கிறது.

எனவே, சென்னை எழும்பூர் -கடற்கரை வரை 4-வது ரயில் பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.274.20 கோடி மதிப்பில் புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது.

இதற்காக கோட்டை, பூங்கா நகர் ஆகிய ரயில் நிலையங்களில் பறக்கும் வழித்தடத்தில் உள்ள ரயில் தண்டவாளம் அகற்றப்பட்டது. இரண்டு ரயில் நிலையங்களில் நடைமேடை சுவர் இடிப்பு பணியும், கோட்டை ரயில் நிலையத்தில் 3, 4, 5-வது நடைமேடைகள் மற்றும் நடைமேம்பாலம் அகற்றும் பணியும், பூங்கா நகர் நிலையத்தில் கட்டிடம் அகற்றும் பணியும், கூவம் ஆற்றை ஒட்டி, பூமிக்கடியில் கம்பிகள் மூலமாக அடித்தளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - கடற்கரை வரையிலான 4-வது பாதைக்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில் தண்டவாளம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, கோட்டை ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பேசிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், “தற்சமயம் ஒரு பெரிய பாலப் பணிகளும், 7 சிறிய பாலப்பணிகளும் முடிந்துள்ளன. ரயில்வே தண்டவாளத்தின் ஒரு பகுதி கூவம் ஆற்றை ஒட்டி வருகிறது. இங்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தடுப்புசுவர் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
கோட்டை ரயில் நிலையம் அடுத்த 3 மாதங்களில் தயாராகி விடும். அதன்பிறகு, வேளச்சேரி - கோட்டை ரயில் நிலையம் வரை மின்சார ரயில் இயக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x