Last Updated : 18 May, 2024 01:02 PM

1  

Published : 18 May 2024 01:02 PM
Last Updated : 18 May 2024 01:02 PM

தொழில்நுட்ப கோளாறு: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் இடையே 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14-ம் தேதி பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் தினசரி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டாததால் அது வாரத்திற்கு மூன்று நாட்கள் என குறைக்கப்பட்டது. அதற்கும் போதிய பயணிகள் இல்லாததால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் இன்ட்ஸ்ரீ என்ற நிறுவனம் கப்பல் இயக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டு இம்மாதம் 13-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதாக அறிவித்தது. ஆனாலும் அன்றைய தினம் தொடங்கப்படாமல் மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிர்வாக அனுமதி மற்றும் கடல் சார் வணிக உரிமம் ஆகியவற்றின் காரணமாக, அன்றைய தேதியிலும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படாமல் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை விமான போக்குவரத்துத் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையே மே 19 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகுச் சேவை ‘தொழில்நுட்பக் குறைபாடு’ காரணமாக தாமதமாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் எவ்வித தொழில்நுட்பக் குறைபாடு என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. இந்த தகவலை இன்ட்ஸ்ரீ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறை களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் எமது திட்டமிட்ட நாகை - காங்கேசன் துறை கப்பல் சேவையை இயக்க முடியவில்லை. மிக விரைவில் புதிய பயண தேதிகள் அறிவிக்கப்படும். இதுவரை கப்பல் பயணத்துக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள் செலுத்திய முழு கட்டணத் தையும் முழுமையாக திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த பயணிகள் மீண்டும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x