Published : 18 May 2024 05:49 AM
Last Updated : 18 May 2024 05:49 AM
சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைவதால், தேர்தல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதிமுக ஆட்சியின்போது 2019-ம் ஆண்டில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றையும் சேர்த்து 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இதனால், 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.
அதன்பின், 9 புதிய மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று, 2021-ல்திமுக ஆட்சி அமைந்ததும் அந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன.
இந்நிலையில், 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைகிறது.
உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிந்ததும், அவற்றை தரம் உயர்த்துதல், இணைத்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் 100 நாள் வேலை திட்டத்தை கருத்தில் கொண்டு, பல ஊராட்சிகளில் தரம் உயர்த்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவற்றையும் பரிசீலித்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவற்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல்ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, வரும் 2026-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அடுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. அப்போது அந்த அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று திமுக தலைமை அலுவகம் வந்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிநிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
வரும் ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை திமுக மேற்கொள்ளும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT