Published : 18 May 2024 05:25 AM
Last Updated : 18 May 2024 05:25 AM
சென்னை: வியாபாரியிடம் ரூ.34 ஆயிரம் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி சித்திக் (50) என்பவர், கீழ்ப்பாக்கம் ஈ.வி.ஆர்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் கடந்த9-ம் தேதி இரவு பணம் போடுவதற்காக வந்துள்ளார்.
அப்போது, சித்திக்கை நோட்டமிட்ட ஒருவர், கையில் வாக்கி டாக்கியுடன் வந்து, தான் போலீஸ் எனக் கூறி அவரிடம் பணத்துக்கான ஆவணத்தை கேட்டுள்ளார். பின்னர், சித்திக்கிடமிருந்து ரூ.34,500 பறித்துக் கொண்டு, கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
கேமரா காட்சிகள் ஆய்வு: அதைத்தொடர்ந்து சித்திக், கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அவர் கூறிய நபர் அங்கு பணியாற்றாததால், சந்தேகமடைந்த கீழ்ப்பாக்கம் போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துவிசாரித்தனர்.
இதில், பணத்தை பறித்துச் சென்றது ஐசிஎஃப் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமமூர்த்தி (55) என்பதும், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராம மூர்த்தியை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT