Published : 17 May 2024 04:39 PM
Last Updated : 17 May 2024 04:39 PM

“பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷா தீவிரவாத பேச்சு” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.

திருப்பூர்: “தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷாவின் பேச்சு தீவிரவாத பேச்சாக இருக்கிறது. பசு வதை செய்தால், தலைகீழாக தொங்கவிடுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பேச்சுகளை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் இன்று (மே 17) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “காங்கிரஸ் கட்சி வலிமையாக்கப்பட்டால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். காந்தி தனது யாத்திரையின் போது, ‘செய்வோம் அல்லது செத்துமடிவோம்’ என்று சொன்னார். ஆங்கிலேயர்களின் பீரங்கி, துப்பாக்கிக் குண்டுகளுக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்று தந்தவர்.

அப்படிப்பட்ட வம்சாவளியில் வந்த நாம், தேசத்தை பாதுகாக்க காங்கிரஸை வலிமைப்படுத்துவோம். நமக்கு வரலாறு இருக்கிறது. நாம் செய்த திட்டங்கள், வரலாற்றை சொல்லுங்கள்; காங்கிரஸ் மலரும். கட்சியில் பொறுப்பு பெற்றுக்கொண்டு, எதுவும் செய்யாமல் இருந்தால் இன்னும் 57 ஆண்டு காலம் ஆனாலும் நாம் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.ராகுல் மட்டும் 24 மணி நேரமும் உழைக்கிறார். பொதுத்துறை நிறுவனங்களை நாம் உருவாக்கினோம். நீராதாரத்தை பெருக்க அணைகளைக் கட்டினோம்.

இன்னும் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளோம். அதையெல்லாம் நாம் மட்டும் தான் பேச முடியும். பாசிஜ பாஜகவினர் கூட காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் ஊழலற்ற ஆட்சியை தந்தது தான்.இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பெருமை. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் பேச திராணி, தைரியம் ராகுல் காந்தியை தவிர வேறு யாருக்கும் உண்டா?” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 21-ம் தேதி ராஜீவ்காந்தி நினைவுநாள் வருகிறது. அந்தநாளில் ராஜீவ் காந்தி நினைவஞ்சலி கூட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் அவரது உருவப்படத்துடன் அமைதி யாத்திரை நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் அனைத்து துறைகளும் வீழ்ச்சி அடைந்து, தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமித் ஷாவின் பேச்சு தீவிரவாத பேச்சாக இருக்கிறது.

பசு வதை செய்தால், தலைகீழாக தொங்கவிடுவோம் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த பேச்சுகளை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைதுறை தோல்வியைத் தழுவி உள்ளது. விபத்துகளை தவிர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3-ம் கட்ட தேர்தலுக்குப் பின்னர் மோடி, 400 தொகுதிகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டார். பாஜக 100 சீட்டுகளுக்குள் வரும். மோடியை வீட்டுக்கு அனுப்பவும், ராகுலை பிரதமர் ஆக்கவும் மக்கள் முடிவு செய்துவிட்டனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x