Published : 17 May 2024 04:33 PM
Last Updated : 17 May 2024 04:33 PM
சென்னை: தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார்.
தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக சென்னை மாவட்டத்தில் இருந்து 150 பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அல் மக்கா ஹஜ் சர்வீஸ், எம்.எஸ்.வேர்ல்டு டிராவல் சர்வீசஸ், முஷமில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நாளை ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதையொட்டி இவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கும் ஹஜ் பயிற்சி முகாம் மற்றும் பயணிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் இன்று (வெள்ளி கிழமை) நடைபெற்றது. அல் மக்கா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் மவுலானா சம்சுதீன் காஸ்மி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது, தமிழ்நாடு அரசு வஃக்பு வாரியத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான், மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்று, ஹஜ் பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது, “இந்தியா முழுவதும் நடப்பாண்டில் 1.75 லட்சம் பேர் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். இதில் அரசின் ஹஜ் கமிட்டி சார்பாக 1.40 லட்சம் பேரும், தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 38 ஆயிரம் பேரும் இந்த முறை புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 5,800 பேர் தங்களது புனித ஹஜ் யாத்திரையை வரும் 26-ம் தேதி முதல் மேற்கொள்ள உள்ளனர்.அதேபோல தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் 2,800 பேரும் ஹஜ் பயணத்தை தமிழகத்தில் இருந்து மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.
உலகமே சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் ஏங்கக்கூடிய காலகட்டத்தில் உலகளாவிய இஸ்லாமிய மார்க்கம், எந்தவித வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்தி காட்டுவதற்கான பயணமாகவும், சமத்துவத்திற்கான பயணமாகவும் இந்த புனித ஹஜ் பயணம் அமையும்.
இந்தியா என்ற மதச்சார்பற்ற தேசம் பாதுகாக்கப்படவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டு, நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் மேலோங்கவும், மனித நேயம் தலைதூக்கவும் இந்த புனித ஹஜ் பயணத்தில் பிரார்த்தனை செய்ய உள்ளோம். இதன்மூலம் அமைதியான, அனைவருக்குமான, சமூக நீதி கொண்ட ஒரு தேசமாக இந்தியா உருவாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT