Published : 17 May 2024 03:20 PM
Last Updated : 17 May 2024 03:20 PM

13 வயது மகனை வளர்ப்பதில் தகராறு: தாய் மீது பொய்யாக பதியப்பட்ட போக்சோ வழக்கு ரத்து

சென்னை: 13 வயது மகனை யார் வளர்ப்பது? என்ற பிரச்சினையில் கணவரைப் பிரிந்து வாழும் மனைவி மீது பொய்யாக பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் கணவரும், பெண் வழக்கறிஞரான அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் அவர்களின் 13 வயது மகனை யார் வளர்ப்பது? என்ற பிரச்சினையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தாயாருக்கு எதிராக மகன் அளித்த புகாரின் பேரில் பெண் வழக்கறிஞர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், என் மீதுள்ள கோபத்தில் மகனை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து எனக்கு எதிராக கணவர் போக்சோ வழக்குப்பதிவு செய்ய வைத்துள்ளார். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞர் தரப்பில், ‘தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஒருவருக்கு, தனது கணவர் ரூ.1 லட்சத்தை கூகுள் பே மூலமாக லஞ்சமாக அளித்துள்ளார்.

அதன்பிறகே தன் மீது பொய்யாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் தனது விசாரணையில் உறுதி செய்துள்ளார்’ என்று வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுவன் தாயாருக்கு எதிராக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பெண் வழக்கறிஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது’ என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மனைவி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ய கணவர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் தவறான வழிகாட்டுதல் அடிப்படையில் போலீஸார் முறையாக விசாரிக்காமல் இந்த வழக்கை மனுதாரருக்கு எதிராக பதிவு செய்துள்ளனர், எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தாம்பரம் காவல் ஆணையர் இந்த விவகாரம் குறித்து ஒரு உயர் அதிகாரியை நியமித்து 4 மாதங்களில் முறையாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x