Published : 17 May 2024 12:27 PM
Last Updated : 17 May 2024 12:27 PM
கோவில்பட்டி: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீடு 70 சதவீதம் வரை உயர்த்துவதற்காக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 9 பதிவுத்துறை மண்டலங்கள், 50 பதிவு மாவட்டங்கள், 571 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. பத்திரப்பதிவு செய்யப்படும் வழிகாட்டி மதிப்பீட்டில் கிரையம் பெறுவதற்கு 7 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணம், 2 சதவீதம் நிர்வாகக் கட்டணம் என 9 சதவீதம் அரசுக்கு வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், அரசு ஒவ்வொரு ஆண்டும் இடங்களின் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இதனால், பத்திரப்பதிவு கட்டணம் மூலம் அரசுக்கு ஆண்டுக்காண்டு வருவாய் உயர்ந்தது. கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் எவ்வித அறிவிப்புமின்றி பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீடு கட்டணத்தை 3 மடங்கு அரசு உயர்த்தியது.
இந்நிலையில், வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் பத்திரப்பதிவு துறையால் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து ள்ளனர்.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீடு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 மடங்கு உயர்த்தப்பட்டது. தற்போது, மேலும் 70 சதவீதம் உயர்த்துவதற்காக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட் தொழில் புரிவோருக்கு இதனால் பெரிதளவில் பாதிப்பதில்லை. செலவைக் கணக்கிட்டு கணிசமான லாபத்துடன் விற்று விடுவார்கள். ஆனால் கிராமங்களில் விவசாயம் செய்வோர், சொற்ப அளவில் நிலம் வைத்திருப்போர் தங்கள் குடும்பத்தினருக்கு ஆவணம் செய்ய மற்றும் பாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்றால், தற்போதைய வழிகாட்டி மதிப்பீட்டுப்படி அதிக செலவாகிறது.
கிராமப்புறங்களில் காலி மனைக்கு சதுர மீட்டர் ரூ.340 ஆக இருந்த வழிகாட்டி மதிப்பு, ரூ.540-ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் ஏற்பாடு ஆவணமோ, தங்கள் சந்ததியினருக்கு நன்கொடையோ, உயில் சாசனமோ செய்ய பெரிதும் சிரமப்படுவார்கள். எனவே, வழிகாட்டி மதிப்பை உயர்த்து வதை மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து பழைய நிலை தொடரச் செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT