Last Updated : 17 May, 2024 10:48 AM

 

Published : 17 May 2024 10:48 AM
Last Updated : 17 May 2024 10:48 AM

கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி, கோடை விழா தொடக்கம்

மலர் கண்காட்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று (மே 17) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படும்.

மலர் கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இந்தாண்டு இன்று ( மே 17) காலை தொடங்கிய 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடக்க விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தார்.

தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி வரவேற்றார். மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா , சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், டேலியா, உட்பட 15 வகையான 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்ளில் பூத்துக் குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்தன. கண்காட்சியின் சிறப்பு அம்சமாக மயில், கிளி, கரடி, ஈமு கோழி, மரம், ஆகியவை கார்னேஷன், ரோஜா மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி, வரையாடு, வீணை ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. வேளாண், தோட்டக்கலை, வனத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகள் சார்பில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 30 வகையான கொய் மலர்கள் நூற்றுக் கணக்கான தொட்டியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

கோடை விழாவை முன்னிட்டு கண்காட்சியை பார்த்து ரசிக்க மாற்றுத்திறனாளிகள் நுழைவு கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம், கண்காட்சியை முன்னிட்டு நுழைவுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

மே 26-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளூர் கலைஞர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார அணி வகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

வழக்கமாக,கோடை விழா தொடக்க நாளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். ஆனால், இந்தாண்டு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை வார விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை காட்டிலும் குறைவாக இருந்தது.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக மலர் கண்காட்சி தொடக்க விழா காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது.

அதேபோல், சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கில் பூத்துள்ள மலர்களை பார்த்து ரசிப்பதற்காக எந்த ஆண்டும் இல்லாதது போல் 10 நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி நுழைவு கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x