Published : 04 Apr 2018 08:58 PM
Last Updated : 04 Apr 2018 08:58 PM
ஐபிஎல் போட்டிகள் காவிரி விவகாரத்தால் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் வரும் நிலையில் போட்டி நடக்கட்டும், நாம் எப்படி அதை காவிரி போராட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப்பில் சிலர் யோசனைகளைப் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது.
ஐபிஎல்லுக்கும் தமிழகத்துக்கும் ஏகப் பொருத்தம். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது இலங்கை வீரர்கள் அணியில் இருந்தால் ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்ற பிரச்சினை உருவானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுகுறித்து கடிதமே எழுதினார். போட்டியும் வெளி மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் சூதாட்ட விவகாரத்தில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் தமிழக ரசிகர்கள் சோர்ந்து போயினர். அனைவராலும் நேசிக்கப்பட்ட தோனி புனே அணிக்குப் போனார். அங்கு கேப்டனாக இருந்தார். தோனி இருக்கும் அணி தான் சிஎஸ்கே. அதுதான் தமிழக அணி என்ற எண்ணத்துடன் தமிழக ரசிகர்கள் போட்டியை ரசித்தனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தடை நீங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் புதுப்பொலிவுடன் மீண்டும் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட அதே வீரர்கள் உள்ளனர். ஒரே ஒரு வருத்தம் அஸ்வின் இல்லை என்பது, ஆனால் அதை ஈடுகட்ட ஹர்பஜன் சிங் வந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அதே நேரம் ஆல்ரவுண்டர் வாட்சன் இணைந்துள்ளதும், இளம் வீரர்கள் இணைந்திருப்பதும் ஒரு புதுவகையான அணியாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட இருமடங்கு கட்டணம் உயர்த்தியும் அடிப்படை டிக்கெட் விலை 1300 ரூபாயாக நிர்ணயித்தும் சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டு விட்டது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்றும், நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று கூறப்படும் நிலையில் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுதுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டால், மேலும் சில முக்கிய அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் போட்டியை குறுகிய காலமே உள்ள நிலையில் மாற்றும் வாய்ப்பு இல்லை. போட்டியை நடத்தியே தீர்வோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் கூறியுள்ளது.
இந்நிலையில் சிலர் போட்டிக்கு இடையூறு இல்லாமல் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆலோசனைகளைப் பதிவிட்டு வருகின்றனர். போட்டி நடக்கும் நேரம் அனைவரும் எழுந்து நின்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக 10 நிமிடம் தொடர் கோஷமிடலாம், செல்போன் டார்ச் மூலம் மொத்தமாக எதிர்ப்பைப் பதிவு செய்யலாம், பதாகைகளை ஏந்திப் பிடித்து எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்றெல்லாம் ஆலோசனைகள் கூறுகின்றனர்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் அஹிம்சை முறையில் ஒரு யோசனை வைத்துள்ளார். “வரும் 10-ம் தேதி சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாகச் சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.” என பதிவிட்டுள்ளார்.
இன்னும் சிலர் பெரிய பதிவை இட்டுள்ளனர் அவை வருமாறு:
“மெரினாவில் போராட தடை எதற்கு? மெரினாவுக்கு போகணும். இருக்கவே இருக்கு சேப்பாக்கம் மைதானம், டிக்கெட் எடு கொஞ்சம் சாப்பாடு தண்ணீர் எல்லாம் வாங்கிட்டு உள்ளபோ,
மேட்ச் நல்லா பாரு எவன் தோற்றாலும் வென்றாலும் இடையில் நமது பலகைகளை உலகம் எங்கும் தெரிய காண்பி
போட்டி முடிந்ததும் மைதானத்தை விட்டு எவனும் வெளிய வராதே, அவ்வளவு பெரிய மைதானம் 40 ஆயிரம் பேரு உள்ளே போகலாம் உலகம் முழுவதும் இது பெரிய அளவில் பேசப்படும். மாற்றி யோசியுங்கள்”
“தோனிக்கும் கோலிக்கும் பதாகை தூக்குவதை விட நீ உண்ணும் உணவுக்காக, உன் வயிற்றுச்சோறுக்காக தன் உயிரைக் கொடுத்துப் போராடும் விவசாயிக்காக ஒருநாள் நீ போராடி பதாகையை ஏந்திப்பிடி, அதில் தவறு இல்லை” இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட்டும், சிக்சரும் விளையாட்டின் பரபரப்பும் இருக்கும் போதே அரசியலுக்கும் பஞ்சமிருக்காது என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT